அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், அவரது ஆட்சியில் அரசாங்கத்தின் நிர்வாக பொறுப்பை கவனிக்க உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது அவரது தேர்தல் வெற்றிக்கு உதவிய எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோர் அந்த நாட்டின் செயல்திறன் துறையை (Department of Government Efficiency – DOGE) வழி நடத்துவார்கள் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். எலான் மஸ்க் நிதியுதவி செய்தார். விவேக் ராமசாமி, ட்ரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார்.
அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர், அடிப்படையில் தொழிலதிபர்களாக உள்ளனர். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். அதேபோல் விவேக் ராமசாமியும் தொழிலதிபராக இருந்து குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
“இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் வழி வகுக்கும் ‘Save America’ இயக்கத்திற்கு அவசியம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
யார் இந்த விவேக் ராமசாமி..?
ட்ரம்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விவேக் ராமசாமியின் பெயர் அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தை வழிநடத்த உதவப்போகும் விவேக் ராமசாமி யார், அவரது பெற்றோர், சொந்த ஊர், அவரது படிப்பு, தொழில் உள்ளிட்ட விவரங்கள் இங்கே…
தமிழ் பிராமண பெற்றோருக்குப் பிறந்த விவேக் ராமசாமியின் முழு பெயர் விவேக் கணபதி ராமசாமி. அவரது தந்தை, வி.கணபதி ராமசுவாமி, கோழிகோட்டில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ( Calicut NIT) பட்டதாரி. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராகவும் காப்புரிமை வழக்கறிஞராகவும் பணிபுரிந்தார் . தாயார் கீதா ராமசாமி, மைசூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதியோர் மனநல மருத்துவராக பணியாற்றினார். தமிழர்கள் என்றாலும், அவர்களது குடும்பத்துக்கு கேரளாவில் மூதாதையர் வீடு இருந்தது. அதனால்தான் விவேக்குக்கு தமிழ் நன்றாக தெரிந்தாலும் மலையாளமும் புரியும்.
இவரது பெற்றோர் கேரளாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த நிலையில், 1985 ஆகஸ்ட் 9 ல் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஓஹியோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ஆனாலும், குடும்பத்துடன் டேட்டனில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
38 வயதாகும் விவேக் ராமசாமிக்கு ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம் பெற்றவர். அத்துடன், பிரபல யேல் சட்டப்பள்ளியிலும் 3 ஆண்டுகள் சட்டப்படிப்பு ( JD – Juris Doctor ) படித்தவர்.
அவரது மனைவி, அபூர்வா ராமசாமி (நீ திவாரி), ஒரு மருத்துவர். யேல் பல்கலைக்கழகத்தில் விவேக் சட்டம் படிக்கும் போது அவர் மருத்துவம் படித்து வந்தார். அப்போது தான் இருவரும் சந்தித்து, பின்னர் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு கார்த்திக், அர்ஜுன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஹெட்ஜ் ஃபண்ட் என்ற நிறுவனத்தின் முதலீட்டு ஆலோசகராக பணிபுரிந்தார். அதே சமயம் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்கு முன்பே தான் பல மில்லியன் டாலர்களை சம்பாதித்திருந்ததாக விவேக் ராமசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 2014 ஆம் ஆண்டில், ரோவண்ட் சயின்சஸ் என்ற தனது சொந்த பயோடெக் நிறுவனத்தை நிறுவினார். முழுமையாக உருவாக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படாத மருந்துகளுக்கான காப்புரிமைகளை பெரிய நிறுவனங்களிடமிருந்து பெற்று, அதனை சந்தைப்படுத்தும் தொழிலில் இவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
2021 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார். 2023 ல் பிரபல ‘ஃபோர்ப்ஸ்’ இதழ், ராமசாமியின் சொத்து மதிப்பு 630 மில்லியன் டாலர் என மதிப்பிட்டிருந்தது.
தொழில்முனைவோர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாகவும் திகழும் அவர், நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விண்ணப்பித்து, பின்னர் போட்டியிலிருந்து விலகி, ட்ரம்ப் வெற்றிக்கு உழைத்தார். அதற்கான பரிசாகவே விவேக் ராமசாமிக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது.