தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இதுவரை இத்திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இத்திட்டம் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது. குறிப்பாக, மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கான UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை படைக்க இத்திட்டம் முக்கிய பங்காற்றி வருகிறது.
அந்த வகையில், தற்போது இந்த திட்டத்தின் மூலம் 50 பேர் UPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர் என்ற தகவல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு UPSC தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 மாணவர்கள் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியும் இணைந்து UPSC தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றன. இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 மாணவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், இது 37% தேர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது. இவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் மாநில தரவரிசையில் முதலிடத்தையும், இந்திய அளவில் 23 ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். அதேபோல், மோனிகா 39 ஆவது இடத்தைப் பிடித்து மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ் மற்றும் சங்கரபாண்டியன் ஆகியோர் தேர்ச்சி பெற்று, தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தியுள்ளனர்.
UPSC முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகையும், முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் முழுநேர மற்றும் பகுதிநேர பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளத்தில், “நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!” என பதிவிட்டுள்ளார்.
இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் முதல் ஆண்டிலேயே 47 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர், இதில் 6 பேர் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றனர். 2025 ஆம் ஆண்டு முடிவுகள் இத்திட்டத்தின் தாக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.