Amazing Tamilnadu – Tamil News Updates

மத்திய பட்ஜெட் 2025 : ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது… முழு விவரம்

2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இதில் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதே வருமான வரி விலக்குக்கான வரம்பு ​​அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவியது. ஆனால், அதிகரிக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டபோதே, மீண்டும் அது குறித்த எதிர்பார்ப்பு தான் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சம்பளதாரர்களிடையே அதிகம் நிலவியது.

அந்த வகையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை அவர்களை ஏமாற்றாமல், தனது பட்ஜெட் உரையில் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

வருமான வரி விலக்கு குறித்த முழு விவரம்

இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வருமாறு…

12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை.

புதிய வருமான வரி முறையின் படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு இனி வரி இல்லை. தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும்.

வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக அரசுக்கான வரி வருவாய் குறையும். நேரடி வரிகளில் ரூ.1 லட்சம் கோடி, மறைமுக வரிகளில் ரூ.2,600 கோடி இழப்பு ஏற்படும்.

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

பழைய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம்

ரூ.4 லட்சம் வரை – வரி இல்லை
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – 5% வரி
ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை – 15% வரி
ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை – 20% வரி
ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை – 25% வரி
ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30% வரி

மூத்த குடிமக்களுக்கு சலுகை

வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.

தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும்.

வீட்டு வாடகைக்கான TDS பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

கல்விக்காக பணம் அனுப்புவதற்கான மூல விகித வரி (TCS) நீக்கப்படுகிறது.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

Exit mobile version