Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

மத்திய பட்ஜெட்: பீகாருக்கு தாராள நிதி ஒதுக்கீடு… நிதிஷ்க்கு ‘குஷி’!

ந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், அம்மாநிலத்துக்கு தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டு, புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் தாக்கலுக்கு பீகார் மாநிலத்தின் பாரம்பரிய சேலையை அணிந்து வந்த நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு அறிவித்த முக்கிய நலத்திட்டங்கள் வருமாறு:

பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் (நிஃப்டம் – NIFTEM) அமைக்கப்படும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.

பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும்.

ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகள் விரிவுபடுத்தப்படும்.

பீகாரில் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அம்மாநிலத்தில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

தலைநகர் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

மிதிலாஞ்சில் உள்ள மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம், அப்பகுதியில் 50,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள். அவர்களுக்கு பாசன நீர் கிடைக்கும்.

பீகாருக்கு அதிக சலுகைகள் ஏன்?

பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக, பட்ஜெட்டில் அதிக சலுகைகளை அறிவித்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவும் , ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவும் தான் மோடி அரசு மத்தியில் நீடிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் வரவிருப்பதையும் கருத்தில் கொண்டே பட்ஜெட்டில் அம்மாநிலத்திற்கு இவ்வாறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், நிதிஷ் குமார் மகிழ்ச்சி அடைவார்.

கடந்த பட்ஜெட்டில் பீகாருக்கு சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் வெள்ள மேலாண்மைக்காக ரூ.59,000 கோடி ஒதுக்கப்பட்டது. அப்போது முதல்வர் நிதிஷ் குமார், பீகாருக்கு சிறப்பு வகை அந்தஸ்து (SCS)அல்லது சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version