Amazing Tamilnadu – Tamil News Updates

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: ‘அறிந்தே செய்யும் அநீதி’ – வைரமுத்துவின் ஆதங்க கவிதை!

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ஆந்திரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கே அதிக நிதி ஒதுக்கீடும், பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படாததும், நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததும் தமிழக மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தந்த மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி நாடாளுமன்றத்தில் இன்று, ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள், கைகளில் கண்டன வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் மாநிலங்களவையிலும், பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

வைரமுத்து ஆதங்கம்

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து ‘இது அறிந்தே செய்யும் அநீதி’ எனது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த கவிதை கீழே…

ரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது

இது
அறிந்தே செய்யும் அநீதி

தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு

மழை
மாண்பு தவறிவிட்டது

நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது

எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” எனப் பதிவிட்டுள்ளார்.

வைரமுத்துவின் இந்த கவிதை சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version