Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

மத்திய பட்ஜெட் 2024: கண்டுகொள்ளப்படாத தமிழகம்… ஆந்திரா, பீகாருக்கு தாராள நிதி ஒதுக்கீடு!

த்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆயுளைத் தீர்மானிக்கும் கட்சிகளாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் உள்ளன. இந்த இரு கட்சிகளின் ஆதரவில் தான் நாடாளுமன்றத்தில் தனிபெரும்பான்மை இல்லாத பாஜக-வால் ஆட்சி அமைக்க முடிந்தது.

தங்களுக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும், முக்கிய திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என இரு தலைவர்களும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோரை மனம் குளிர வைக்கும் வகையில், ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு தாராளமான நிதி ஒதுக்கீடும், ஏராளமான சிறப்புத் திட்டங்களும், அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு நிதி

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். விசாகப்பட்டினம் – சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில்முனையம் அமைக்கப்படும்.ஆந்திராவின் பின் தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். சாலை மேம்பாடு, நீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

பீகாருக்கும் தாராளம்

பீகாரில் பல்வேறு சாலைத் திட்டப் பணிகளுக்காக ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும். கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தர் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும். புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து கடன்பெற பீகாருக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்.ரூ.11,500 கோடியில் பீகாரில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாசனத்திற்கும் திட்டங்கள் கொண்டுவரப்படும்.காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்டவை உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும்.பீகார் கயா மற்றும் புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும். பீகாரில் உள்ள புராதனமான கோயில்களை மேம்படுத்த சிறப்பு நிதி.நாலந்தா பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுக்கும், சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்க திட்டம். அசாம், இமாச்சல் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உத்தராகண்ட், சிக்கிமில் நிலச்சரிவு, வெள்ள பாதிப்புகளை தடுக்கவும் சிறப்புத் திட்டம் என மேலும் பல அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

கண்டுகொள்ளப்படாத தமிழகம்

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களோ அறிவிப்புகளோ எதுவுமே இடம்பெறவில்லை. அவ்வளவு ஏன்… பட்ஜெட்டில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பலரும் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்தில், தமிழகத்துக்கு எவ்வித திட்ட அறிவிப்பும் இல்லை. இது தமிழக மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கேட்டிருந்தோம். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்பட வில்லை. மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன். தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளை நமது எம்.பி-க்கள் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

இதுபோன்று மேலும் பல தமிழக தலைவர்களும் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version