மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2024 – 25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மொபைல்போன், தங்கம், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல பொருட்கள் மீதான வரி விதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்
புற்றுநோய் மருந்துகள் மற்றும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி கணிசமாக குறைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். இதனால் இந்த பொருட்களுக்கான சில்லறை விலை குறைகிறது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுகளின் வரி விதிப்பும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்கள்
மொபைல் போன்கள், மொபைல் பிசிபிஏக்கள் (Mobile PCBA) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீது விதிக்கப்பட்டு வந்த அடிப்படை சுங்க வரி, 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் செல்போன்கள் மற்றும் மொபைல் சார்ஜர்களின் விலை குறையலாம்.
கடந்த 6 ஆண்டுகளில், மொபைல் போன்களின் உள்நாட்டு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது மற்றும் ஏற்றுமதி 100 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இந்த நிலையில், மொபைல் போன்கள் மீதான இறக்கு மதி வரி குறைப்பால் தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனடையும். அதாவது, தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளியில் இருந்து மொபைல் போன்கள் அல்லது சார்ஜர்களை இறக்குமதி செய்யும் போது, வரி குறையும். இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அதன் பலன் தெரியவரும்.
தங்கம், வெள்ளி
மேலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6% ஆகவும், பிளாட்டினம் மீதான வரி 6.5% ஆகவும் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர், 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் புற்று நோய் சிகிச்சைக்கான 3 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான சுங்க வரியும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெரோ நிக்கல் மற்றும் ப்ளிஸ்டர் காப்பர் மீதான அடிப்படை சுங்க வரிகள் நீக்கப்படுகின்றன. சோலார் பேனல் உற்பத்திக்கான மூலதனப் பொருட்கள் மீதான வரியும் நீக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மீது வரி அதிகரிப்பு
அம்மோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரி 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக்கின் மீதான விகிதம் 25% உயர்த்தப்படும்.
சில வகையான தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
பங்குச் சந்தை மூலதன வரி அதிகரிப்பு
பங்குச்சந்தையில் ஓராண்டுக்கும் குறைவான முதலீடுகள் மீதான மூலதன வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்படும்.
ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.