Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

மத்திய பட்ஜெட் 2024-25 : வருமான வரி, பென்சன்: சம்பளதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவிப்புகள்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், வருமான வரி விலக்கை தற்போதுள்ள ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் என்பதை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பை தான் நடுத்தர மக்கள் மற்றும் சம்பளதாரர்கள் அரசிடமிருந்து மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். நாட்டின் முன்னணி நிதி ஆலோசர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்கள் கூட இதற்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

ஏமாற்றம் அளித்த வரி விலக்கு வரம்பு மாற்றம்

ஆனால், அந்த எதிர்பார்ப்புகள் நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் பொய்த்துப்போனது. வருமான வரி விலக்கு வரம்பில் மாற்றமில்லை.

புதிய வருமான வரி முறையில் மட்டுமே ரூ.3 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி இல்லை என மாற்றம். வருமான வரி விதிப்பின் இதர விவரங்கள் வருமாறு:

ரூ.3 -7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 5% வரி

ரூ. 7 முதல் -10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 10% வரி

ரூ.10 முதல் -12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 15% வரி

ரூ.12 முதல் -15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு – 20%

ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்துக்கு – 30% வரி

பழைய வருமான வரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. அப்படியே தொடரும். புதிய வருமான வரி முறையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நிலையான வரிக் கழிவு உயர்வு

வருமான வரி விதிப்பில் நிலையான கழிவு ( Standard deduction) ரூ. 50,000 லிருந்து 75,000 ஆக உயர்த்தப்படும்.

குடும்ப பென்ஷன் திட்டத்தின் மீதான நிலையான கழிவு ரூ.15,000-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயர்வு. இவற்றின் மூலம் 4 கோடி வருமானதாரர்கள், ஓய்வூதியர்களுக்கு பலன் பெறுவார்கள்.

சில சொத்துக்களுக்கு மூலதன ஆதாய விலக்கு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.

டிடிஎஸ் ( TDS)தாக்கலில் நிகழும் தாமதம், இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

தேசிய ஓய்வூதிய திட்டம் பங்களிப்பு வரம்பு அதிகரிப்பு

அதேபோன்று தனியார் துறை ஊழியர்களுக்கு NPS ( National Pension scheme ) எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்துக்கான பங்களிப்பு தொகை, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் தற்போது பிடித்தம் செய்யப்படும் 10 சதவீதம் என்பது 14 சதவீதமாக அதிகரிக்கப்படும். தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கும் இது 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகள் அனைத்தும் புதிய வரி விதிப்பில் மட்டுமே கிடைக்கும் என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

மேலும், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும். EPFO-வில் பதிவு செய்யப்பட்டு ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் இளைஞர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவர் என்பது உள்ளிட்ட மேலும் பல அறிவிப்புகளையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் வெளியிட்டார்.

Exit mobile version