யுஜிசி புதிய விதி: மாணவர்கள், கல்வியாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு!

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில், யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட வரைவு அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் இதுவரை மாநில அரசு தரப்பில் பிரதிநிதி ஒருவர் இடம்பெற்றிருந்த நிலையில், புதிய விதிகளின் படி, இனி மாநில அரசின் பிரதிநிதிக்கு இடமில்லை. ஆளுநரே முடிவு செய்வார் என புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதிகளை பின்பற்றாத பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும், மானியக்குழுவின் திட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படும், திறந்த நிலை மற்றும் தொலைத்தொடர்பு முறையிலும், ஆன்லைன் வாயிலாகவும் பட்டப்படிப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவை அப்பட்டமான அதிகார அத்துமீறல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அத்துடன் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தைத் தொடர்ந்து, கேரளாவிலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு மின்னஞ்சல் அனுப்ப அழைப்பு
இந்த நிலையில், யுஜிசி வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெறக்கோரி மாணவர்களும், பெற்றோரும், கல்வியாளர்களும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் கருத்தை அனுப்ப வேண்டும் எனத் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மின்னஞ்சல் அனுப்ப வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு பேசிய அவர்,”யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை மாநில உரிமையையும், மாநில கல்வி உரிமையையும் பறிப்பதாக அமைந்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் முடக்க மத்திய அரசு சதி திட்டம் தீட்டுவது போல் தெரிகிறது. தன்னாட்சி அமைப்பான யுஜிசி மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து வரும் நிலையில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் யுஜிசி தனது அதிகார வரம்பை மீறியுள்ளது. இது மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்ட சவால்.

யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கல்வித்துறையில் உள்ளவர்களால் தான் பல்கலைக்கழகத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும். கல்வித்துறைக்கு தொடர்பு இல்லாதவர்களும், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தோரும் துணைவேந்தர் ஆகலாம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பட்டப்படிப்பில் நுழைவுமுறை, விருப்பப்பட்டால் வெளியேறும் முறை இருந்தால் அது இடைநிற்றலை அதிகரிக்கும். அதேபோல், ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் முறையும், ஒரே நேரத்தில் இரு முதுகலை படிப்புகளை படிப்பதும், பொதுக்கல்வியில் இருந்து தொழிற்கல்விக்கும் தொழிற்கல்வியிலிருந்து பொதுக்கல்விக்கும் மாறுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும். இது நமது கல்விமுறையை சீர்குலைக்கும் முயற்சி.
விதிமுறைகளை ஏற்காவிட்டால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. யுஜிசி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என்றெல்லாம் மிரட்டல் விடுக்கின்றனர். இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வி என பல்வேறு புதிய முன்னெடுப்புகளில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருந்த மாநிலம் தமிழகம். அந்த வகையில் வரைவு அறிக்கையை திரும்பப்பெறும் விஷயத்திலும் தமிழகம் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிள் அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் யுஜிசிக்கு மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் தெரிவித்துள்ளார்.