புதிய தொழில் பூங்காக்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கக்கூடியவை.இவை, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், மாநிலம் முழுதும் தொழில் வளர்ச்சியை பரவலாக்க திருவள்ளூர், தூத்துக்குடி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, கடந்த ஜூன் மாதம் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு அமைப்பான சிப்காட் ( SIPCOT ) மூலம், மாநிலம் முழுவதும் சுமார் 11,000 கோடி ரூபாய் முதலீட்டில், மேற்கூறிய 8 இடங்களில் 4,000 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என அவர் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாராத்தில் 1000 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா துவக்க, சிப்காட் முடிவு செய்துள்ளது.இதன் வாயிலாக, 500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய பூங்காவுக்காக முதல் கட்டமாக ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள தெற்கு வீரபாண்டிய புரத்தில் இடம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக விரைவிலேயே தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட உள்ளது.
தூத்துக்குடியில் சிப்காட்டிற்கு ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகம் அருகில் 259 ஏக்கரில் இரண்டு தொழில் பூங்காக்கள் உள்ளன
இது தவிர சில்லாநதத்தில் 415 ஏக்கரில் சமீபத்தில் உருவாக்கப்பட்ட பூங்கா, நிறுவனத்தின் மின்வாகன ஆலைக்கு வழங்கப்பட்டது.
மேலும் தூத்துக்குடி அல்லி குளத்தில் 2200 ஏக்கர், வெம்பூரில் 2200 ஏக்கர், இ வேலாயுதபுரத்தில் 350 ஏக்கரில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.