வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நிலையில், இதற்கான இலவச பயிற்சி வகுப்பு குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், “ஜூன் 9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறும். குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பம் செய்வோர், www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாக படித்து கொள்ள வேண்டும். அவர்கள், தேர்வுக்கான அனைத்து தகுதி வாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த குரூப் 4 தேர்வில் கலந்துகொள்வோர் தேர்வுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக டிஎன்பிஎஸ்சி, டிஎன்எஸ்யூஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 4 தேர்விற்கு 6,244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.