போட்டியிடாமலேயே உள்ளாட்சியில் இடம்பெறப்போகும் மாற்றுத் திறனாளிகள்!

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டுமென கடந்த பிப்.27 ஆம் தேதி கொளத்தூரில் அறிவித்தேன். 12 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்புக் கிடைக்கும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலேயும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய வகையில், சட்டமசோதா நிறைவேற்றப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த மசோதாக்களை முன்மொழிவதை வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள்.
இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். இது, ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்துகிற சமூகநீதியை அடைவதற்கான மற்றுமொரு முன்னெடுப்பாகும்.
இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புர ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத்திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், ” தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.
ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் கிராமப் பஞ்சாயத்துக்களிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமிக்கப்படுவர்” என்றும் கூறினார்.
வாக்களிக்கும் உரிமை இல்லை
இதனிடையே “ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமிக்கும்போது, சம்பந்தப்பட்ட ஊராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட அந்த நியமனம் கூடுதல் இடமாக இருக்க வேண்டும். உரிய தகுதிகளை பெற்றிருக்க வேணடும்.
ஊராட்சியின் பதவிக்கால அளவுடன், நியமன உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைய வேண்டும். அவருக்கு வாக்களிக்க உரிமை இல்லை. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை, மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 100-க்கு அதிகமாகும்போது, மாற்றுத்திறனாளிகள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த மசோதவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.