Amazing Tamilnadu – Tamil News Updates

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா… வெளிநாடு செல்லும் வாய்ப்பு!

மிழக த்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தமிழக கல்வித்துறையில் பல்வேறு புதுமையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவது, அவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமைகள், பேச்சு, ஓவியம், ஆடல், பாடல் உள்ளிட்ட கலைத்திறமைகள் கொண்ட மாணவர்களைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 2022-23 ஆம் கல்வியாண்டில் 27 லட்சம் மாணவர்களும், 2023-24 ஆம் கல்வியாண்டில் 40 லட்சம் மாணவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 1400 மாணவர் மாணவியர்களுக்கு கலையரசி கலையரசன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த கலைத் திருவிழாவை தங்களது பள்ளி மாணவர்களிடையேயும் நடத்த வேண்டும் என அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வந்தன. அந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, இந்த கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் இந்த விழாவில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படிகலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் கடந்த ஆகஸ்ட் 22 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன. இவற்றில் பல குரல் பேச்சு, மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதைக் கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அடுத்தகட்டமாக வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த வகையில், “அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கான குறுவள மற்றும் 1 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு வட்டார அளவில் 7 ஆம் தேதி போட்டிகள் நடத்தி 8 ஆம் தேதிக்குள் வெற்றிபெற்ற மாணவர்கள் தொடர்பான விவரங்களை இஎம்ஐஎஸ்-ல் உள்ளீடு செய்ய வேண்டும்.

அதன் தொடர்ச்சியாக 11ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மாவட்ட அளிவிலான போட்டிகள் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் மாணவர்களின் விவரங்கள் 21 ஆம் தேதி உள்ளீடு செய்ய வேண்டும். அதன் தொடர்ச்சியாக 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில், ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்த வேண்டும்.

குறிப்பாக அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனியாகவும் நடத்த வேண்டும். வட்டார அளவில் நடந்த போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்படும்” என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி அறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த கலைத் திருவிழா மூலம் இந்த ஆண்டு 50 மாணவர்கள் வெளிநாட்டிற்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version