இனி இந்த பட்டப்படிப்புகளுக்கும் அரசு வேலை கிடைக்கும்… தமிழக உயர்கல்வித் துறை ஒப்புதல்!
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கணினி படிப்புகள் சார்ந்து பல்வேறு பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றைப் படித்து முடித்து பட்டம் பெறுபவர்கள், தமிழக அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, குறிப்பிட்ட பணிக்கு தாங்கள் பெற்ற பட்டம் தகுதியானது தானா என்ற குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில் இந்த குழப்பத்தைப் போக்கும் வகையில், பல்வேறு பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களில் அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் சமமான பட்டங்கள் குறித்து தமிழக உயர்கல்வித் துறை தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் சமமானதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
BSc Computer Technology
அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிஎஸ்சி கணினி தொழில்நுட்பத்திற்கான ( BSc Computer Technology) கல்வித் தகுதி, தமிழக அரசின் பொதுச் சேவை துறைகளில் வேலைவாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பிஎஸ்சி கணினி அறிவியலுக்குச் (BSc Computer Science) சமமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் பிஎஸ்சி தகவல் தொழில்நுட்ப (BSc in Information Technology) பட்டமும் சமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Master of Computer Application
மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் முதுகலை கம்யூட்டர் அப்ளிகேஷன் (Master of Computer Application) பட்டமும் தமிழக அரசின் பொதுச் சேவை துறைகளில் வேலைவாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள எம்எஸ்சி தகவல் தொழில்நுட்ப (MSc in Information Technology) பட்டத்திற்குச் சமம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட மகளிர் கிறிஸ்தவக் கல்லூரிகளால் வழங்கப்படும் எம்.எஸ்சி. கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (MSc Computer Science and Technology) படிப்பும் சமமானதாக கருதப்படும்.
BEd Social Science
காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சமூக அறிவியல் போன்ற பி.எட். படிப்புகள் (BEd Social Science) பி.எட். வரலாறு (BEd History) படிப்புக்கு சமமானவை என்றும் கூறப்பட்டுள்ளது.
Master of Science Education Physics
அதேபோன்று மைசூரில் உள்ள பிராந்திய கல்வி நிறுவனம் (Regional Institute of Education) வழங்கும் முதுகலை இயற்பியல் அறிவியல் கல்வி ( Master of Science Education Physics0 படிப்பும், தமிழக அரசின் பொதுச் சேவை துறைகளில் வேலைவாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பி.எட். இயற்பியலுக்கு (BEd Physics) சமமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, கேரளாவின் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் வழங்கும் கல்வித் தகுதியும், தமிழக அரசு வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பி.எட். (BEd) படிப்புக்கு சமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.