பழங்குடியின மேம்பாடு… கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அமலாகும் SADP
தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மேம்பாட்டிற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் ( Special Area Development Programme -SADP) தீட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களில் மலை கிராமங்கள் மற்றும் மலைகளை ஒட்டியிருக்கும் கிராமங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு பணிகள் செய்யப்பட்டன.
குறிப்பாக மலைக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக சாலை, குடிநீர், கழிவறை, மின்சார தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. மேலும், மலைக்கிராம மக்கள் தொழில்கள் தொடங்க வழிவகையும், பசுமையாக்கல் பணியும் அத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு 75 கோடி ரூபாய் செலவிட்டது.
இந்நிலையில் தற்போது, தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகள் இருக்கும் மாவட்டங்களில் மலைக்கிராம மக்கள் மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு அறிவித்ததன் அடிப்படையில் எஸ்ஏடிபி திட்டம் இறுதி வடிவம் பெற்று, அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு தொடர்ச்சி மலைகள் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து 82 வட்டாரங்களை மேம்படுத்த முதலில் திட்டமிடப்பட்டது. அது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் நடத்திய தொழில்நுட்ப மற்றும் அறிவியல் மதிப்பீட்டின்படி, கடல் மட்டத்தில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் உள்ள 33 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த 33 வட்டாரங்களும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ளன.
இந்த 33 வட்டாரங்களிலும் மாநில அரசு, தனது சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி, மேம்பாட்டு பணிகளை செய்யவுள்ளது. இதில், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மத்தியில் உள்ள கல்வராயன் மலை உட்பட பல்வேறு மலைகளில் முழுமையான வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பழங்குடியின மக்கள் பெரிதும் பயனடையவுள்ளனர்.
அதாவது, மலைக்கிராம பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவுள்ளனர். இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில், பெரும்பாலான பகுதிகள் பின்தங்கியவை. அதனால், அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு எஸ்ஏடிபி திட்டம் முன்னுரிமை அளிக்கும் என்றும், நிலையான வளர்ச்சி, பல்லுயிர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, மண், நீர், வனப்பாதுகாப்பு, மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றை செய்திடும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.