Amazing Tamilnadu – Tamil News Updates

ஆளுநர் vs முதலமைச்சர்: ஊட்டி மாநாட்டால் மீண்டும் மோதல் உருவாகுமா?

ருகிற ஏப்ரல் 25, 26 தேதிகளில் ஊட்டி ராஜ்பவனில் ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கிறார். ஆனால், இந்த மாநாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

உச்சநீதிமன்றம் ஆளுநரின் துணைவேந்தர் நியமன அதிகாரத்தைப் பறித்து, அரசுக்கு வழங்கிய பிறகு, இம்மாநாடு ஆளுநரின் அதிகார மீறல் என விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஆளுநர் கூட்டி உள்ள இந்த மாநாட்டால் தமிழ்நாட்டின் உயர்கல்வி மற்றும் மாநில-மத்திய உறவுகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த அலசல் இங்கே…

உச்சநீதிமன்ற தீர்ப்பு

கடந்த ஏப்ரல் 8 அன்று, உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டின் 20 மாநில பல்கலைக்கழகங்களில் 18-இல் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றியது. திமுக அரசு கொண்டுவந்த 10 திருத்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இது மாநில அரசின் கல்வி நிர்வாகத்தில் ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்பட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தனது பொறுப்பை உறுதிப்படுத்தினார். ஆனாலும், ஆளுநர் ரவியே, பல்கலைக்கழகங்கவேந்தராக தொடர்வதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

ஆளுநரின் அதிகாரங்கள்

உச்சநீதிமன்ற உத்தரவு ஒருபுறம் இருந்தபோதிலும், ஆளுநர் ரவி பல முக்கிய அதிகாரங்களை வைத்திருக்கிறார். 10 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தனது பிரதிநிதியை நியமிக்கலாம், பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் முடிவுகளை ரத்து செய்யலாம். மேலும் நிர்வாக அல்லது கல்வி விவகாரங்களில் விசாரணைகளை உத்தரவிடலாம். 2023-ல், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய முடிவை ரவி ரத்து செய்தது இதற்கு உதாரணம். இத்தகைய அதிகாரங்கள், ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதலுக்குத் தொடர்ந்து தூபம் போடுகின்றன.

ஊட்டி மாநாட்டால் சர்ச்சை

ஊட்டி ராஜ்பவனில் நடைபெறவுள்ள துணைவேந்தர்கள் மாநாடு, ஆளுநர் ரவியின் அடுத்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைகயாக பார்க்கப்படுகிறது. திமுக, இந்த மாநாட்டை ஆளுநரின் “அதிகார மீறல்” எனக் கண்டித்துள்ளது, ஏனெனில், கல்வி நிர்வாகத்தில் ஆளுநரின் குறிப்பிடத்தக்க தலையீடு இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசு, 20 மாநில பல்கலைக்கழகங்களில் 18-ல் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து பறித்து, மாநில அரசுக்கு மாற்றியுள்ளது. ஆனால், ஆளுநர்-வேந்தராக பல முக்கிய அதிகாரங்களைத் தக்கவைத்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் ரவி, டெல்லி சென்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தன்கர், உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்திருந்தார். இது மாநாட்டிற்கு அரசியல் முக்கியத்துவம் சேர்க்கிறது. ஆனால், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், இந்த மாநாடு ஆளுநரின் அதிகாரத்தை மீறுவதாகவும், மத்திய அரசின் ஆதரவுடன் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றன. இது, மாநில-மத்திய உறவுகளில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

உயர்கல்வி துறையில் பாதிப்பு

இது குறித்து பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, ஆளுநரின் இத்தகைய அதிகாரங்கள் பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டைப் பாதிக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு வங்காளத்தில் முதலமைச்சரே வேந்தராக இருப்பது போல, தமிழ்நாட்டிலும் இதே முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது, 12 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இது நிர்வாக சிக்கல்களை மேலும் அதிகமாக்கி உள்ளது.

சுருக்கமாகா சொல்வதானால். ஊட்டி மாநாடு, தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதலை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு அதிகாரத்தை வழங்கியிருந்தாலும், ஆளுநரின் வேந்தர் பதவி மற்றும் அதிகாரங்கள் மோதலுக்கு வழிவகுக்கின்றன. இந்த மோதல், உயர்கல்வி நிர்வாகத்தை பாதிக்காமல் இருக்க, கூட்டு கூட்டாட்சி முறையில் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு அவசியம். இல்லையெனில், தமிழ்நாட்டின் கல்வித்துறை மேலும் பின்னடைவை சந்திக்க நேரிடலாம்” என்பதே கல்வியாளர்களின் கவலையாக உள்ளது.

Exit mobile version