மும்மொழி கொள்கை விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் நீடித்து வருகின்றன. இன்னொருபுறம், இந்தி திணிப்புக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தி மொழி கடந்த 100 ஆண்டுகளில் 25 -க்கும் அதிகமான வட இந்திய மொழிகளை விழுங்கி ஏப்பம் விட்டு அழித்துவிட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட பதிவு வட இந்திய சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, கவனம் ஈர்த்து வருகிறது.
ஆளுநர் ஆர்.என். ரவி விமர்சனம்
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் இருமொழிக் கொள்கையை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது தமிழக இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.
தொழில்மயமாக்கலுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், இங்குள்ள மக்கள் வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கிறார்கள். இளைஞர்களிடையே காணப்படும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் சிக்கல்கள் தீவிரமானவை. ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது.

மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று நெல்லை மாவட்டம், செங்கோலத்தில் நடந்த அய்யா வைகுண்டர் 193-ஆவது அவதார விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்றும், என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
தமிழக அரசு பதிலடி
இந்த நிலையில், ஆளுநர் ரவியின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ” தமிழ்நாடு எதில் பின் தங்கியுள்ளது என ஆளுநர் ரவியால் சொல்ல முடியுமா? கல்வியில், மருத்துவத்தில், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களே சொல்லும், அதையெல்லாம் ஆளுநர் ரவி படித்தால்தானே? படித்தாலும் தமிழ்நாட்டின் மீது வெறுப்பேறிய கண்களுக்கு அவையெல்லாம் எப்படித் தெரியும்?
தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி இருமொழிக் கொள்கையினால் சாதித்தவை, தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிக்கலாம் அதற்கு புதிய கல்விக் கொள்கையை ஒரு வழியாக வைத்து உள்நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
தமிழ்-தமிழ்நாடு-தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றின் மீது தொடர்ந்து வெறுப்பை உமிழும் ஆளுநர் ரவி தமிழர்களுக்கு மொழியுணர்ச்சியை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். சனாதனத்தையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் காலூன்றச் செய்திட குட்டிக்கரணம் போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மொழி கொள்கையிலும் ஆளுநர் மூக்கை நுழைத்து தெரிவித்த கருத்தும், அதற்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலடியும், இந்த விவகார தொடர்பான மோதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.