Amazing Tamilnadu – Tamil News Updates

ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறுவதில் புதிய கட்டுப்பாடுகள்… தமிழக அரசின் 4 முக்கிய விதிமுறைகள்!

மிழ்நாட்டில், 3,500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு எளிதில் இணையதளம் மூலம் உடனடி அனுமதி பெறும் வகையில் சுய சான்றிதழ் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் தொடங்கியது.

இத்திட்டத்தின்படி, விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கள ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், கட்டட அனுமதிக்காக காத்திருக்கும் கால விரயம், அலைச்சல் போன்றவை தவிர்க்கப்படும் என்பதால், பொதுமக்களிடையே இந்த திட்டத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் கட்டட அனுமதி பெறுவதில் தவறான தகவல் அளிப்பதோ அல்லது விதிமீறலோ எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் திருத்தும் செய்து, அது குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

4 விதிமுறைகள் என்னென்ன?

அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ள 4 முக்கிய விதிமுறைகள் விவரம் கீழே…

சுயசான்றிதழ் அடிப்படையில் அனுமதி பெறப்பட்ட கட்டடங்களுக்கான நில உரிமையினை, அனுமதி வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் நகரமைப்பு பிரிவால் 100 சதவீதம் சரிபார்க்கப்பட வேண்டும்.

ருவாய் பிரிவினர் 30 நாட்களுக்குள் காலிமனை வரியினை வசூல் செய்ய வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்பு தொகையை பொறியியல் பிரிவினர் 30 நாட்களுக்குள் வசூலிக்க வேண்டும்.

இந்த கட்டுமானங்கள் 2,500 சதுரடி மனையில் 3,500 சதுர அடி பரப்பளவு கொண்ட தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் ஒரு தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்கு உட்பட்ட கட்டுமானம் என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.

இந்த 4 விதிகளில் குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பிரிவினர் நகரமைப்பு பிரிவிற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவர்கள் கட்டட வரைப்பட அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version