தமிழகத்தில், 2500 சதுர அடி வரையிலான மனையில் 3500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு சுயச் சான்று அடிப்படையில் இணைய வழி கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தாா்.
இதனையடுயத்து, இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட அனுமதி பெற பொதுமக்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரங்களைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சதுரடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் நிலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையா், நகராட்சி நிா்வாக இயக்குநா், பேரூராட்சிகள் இயக்குநரிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன. இதில், சென்னை மாநகராட்சியில், ஒரு சதுர அடிக்கு ரூ.100 வீதம், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 ஒருங்கிணைந்த கட்டணமாக நிர்ணயிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாார். நகராட்சி நிர்வாக இயக்குநா், அனைத்து மாநகராட்சிகளையும் 5 நிலைகளாகவும், நகராட்சிகளை 4 நிலைகளாகவும் வகைப்படுத்தி, ஒவ்வொரு நிலைக்கும் ஒரே மாதிரியான கட்டணத்தை பரிந்துரைத்துள்ளார். பேரூராட்சிகளின் இயக்குநரும், பேரூராட்சிகளை 4 நிலைகளாகப் பிரித்து அவற்றுக்கும் ஒரே கட்டணத்தை பரிந்துரைத்துள்ளார்.
சென்னைக்கு கட்டணம் எவ்வளவு?
சென்னை மாநகராட்சியில், 3500 சதுர அடி (325 சதுர மீட்டா்) வரையிலான குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.100, ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1076 கட்டணமாக செலுத்த வேண்டும். மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய 3 சிறப்பு நிலை -ஏ தர மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.88 , சதுர மீட்டருக்கு ரூ.950-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம், சேலம், திருச்சி
தாம்பரம், சேலம், திருச்சி ஆகிய 3 சிறப்பு நிலை பி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.84, சதுர மீட்டருக்கு ரூ.900-ம், ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 5 தோ்வு நிலை மாநகராட்சிகளில் , சதுர அடிக்கு ரூ.79, சதுர மீட்டருக்கு ரூ.850-ம், நிலை 1 மற்றும் 2 என்ற வகையில் 9 மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74, சதுர மீட்டருக்கு ரூ.800-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
நகராட்சிகளுக்கான கட்டணம்
நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தோ்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74, சதுரமீட்டருக்கு ரூ.800-ம், நிலை1, நிலை -2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70 , சதுர மீட்டருக்கு ரூ.750-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.
பேருராட்சிகள்
பேரூராட்சிகளை பொறுத்தவரை, 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70 , சதுர மீட்டருக்கு ரூ.750-ம், 179 தோ்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65 ,சதுர மீட்டருக்கு ரூ.700-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55, சதுர மீட்டருக்கு ரூ.590-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45 மற்றும் சதுரமீட்டருக்கு ரூ.485-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் சுயச் சான்று மூலம் கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஊராட்சிகள்
தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சிஎம்டிஏ எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.290-ம், இதர பகுதிகளில் நகா் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25, சதுர மீட்டருக்கு ரூ.269-ம், சிஎம்டிஏ., எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.237-ம், இதர ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15 மற்றும் சதுர மீட்டருக்கு ரூ.162-ம் கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.