தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் புதிய சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ” பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர் விடுதலை மற்றும் கச்சத் தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்
தொடர்ந்து பேசிய அவர், ” மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தமிழக அரசு மீனவர்களை கைவிடாது” என உறுதியளித்ததோடு, மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் மீனவர்களுக்குப் பல சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.
மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக தெற்கு பகுதியில் இந்தியப் பெருங்கடல் நோக்கிச் செல்வதற்கு வழிவகை செய்யும்பொருட்டு, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்.
60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பன் பகுதியிலும் மற்றும் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் குந்துக்கல் பகுதியிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன்.
இவற்றைத் தவிர, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த சில புதிய வாழ்வாதாரத் திட்டங்களையும் செயல்படுத்திட பின்வரும் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கின்றேன்:

கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7000 பயனாளிகளுக்கு 52 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள 25 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் உபகரணங்கள் வழங்கி, தொடர்பணிகளும் மேற்கொள்ளப்படும்.
பயிற்சிகள் வழங்கி ஊக்குவிக்கும் திட்டம் சுமார் 2,500 மீனவக் குடும்பங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு 9 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
சுமார் 15 ஆயிரத்து 300 மீனவர்களுக்கு, மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கிட 20 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மீன் வளம் சார்ந்த மாற்று வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமானத் தொழில் படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல்சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய 54 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறக்கூடிய வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மீன் வளம் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர, குறிப்பாக, காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டுமுறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்கள் செய்ய சுமார் 14 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு, 53 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்டக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன்மூலம் திட்டச் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.