தொடரும் தமிழக மீனவர்கள் கைது … வேடிக்கை பார்க்கிறதா மத்திய அரசு… கச்சத்தீவு ஒப்பந்த 6 ஆவது ஷரத் சொல்வது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து சென்று வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 25 அன்று நாகப்பட்டினம் மீனவர்கள் 10 பேரை படகுடன் கைது செய்தது இலங்கை கடற்படை. ஜூலை 1 ஆம் தேதியன்று மேலும் 25 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். ஜூலை 23 ஆம் தேதி மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 87 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்த பிறகான சூழலைக் கணக்கிட்டால், வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 3 மாதங்களில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் அத்துமீறல் குறித்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை, மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீதான கைது சம்பவங்கள் அதிகரிப்பது ஏன் என, மீனவர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டோம்.

எஸ்.ஏ.மகேஷ் – அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் தலைவர்

” தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது காலம்காலமாக நடந்து வந்தாலும் தற்போது அதிகரிக்கக் காரணம், இலங்கையில் நடக்க உள்ள தேர்தல் தான். அங்குள்ள மீனவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக சிலர் இந்த விவகாரத்தைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் அடைய நினைக்கின்றனர்.

மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தாலும், அங்கே தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் உரிமை உள்ளது என ஷரத்துகள் உள்ளன. அதற்கு முரணாக கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இரு நாட்டு ஒப்பந்த விதிகளுக்கு மாறாக செயல்படும் போது, கச்சத்தீவு மீதான உரிமையை இந்திய அரசு மீட்டெடுத்திருக்க வேண்டும். அதுகுறித்து தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் அந்த வேலையை மத்திய அரசு செய்யவில்லை.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் போராளி இயக்கம் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. இதற்கு காரணமாக இலங்கை அரசு ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது, தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் இழுவலை மூலம் மீன்பிடிப்பதால் தங்கள் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினர். ஆனால், அண்மையில் நடந்த கைது சம்பவத்தில் 8 நாட்டுப் படகுகளும் 36க்கும் மேற்பட்ட மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இழுவலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதால் தான் கைது சம்பவங்கள் நடப்பதாக இலங்கை அரசு கூறும் தகவல் பொய் என்பது தெளிவாகிறது.

நான்கு நாட்களுக்கு முன்பு தருவைகுளத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள், பாரம்பரியமாக மீன் பிடிப்பவர்கள். இவர்களை மன்னார் வளைகுடாவில் கைது செய்துள்ளனர். இலங்கையில் சிங்கள மீனவர்கள் நவீன மீன்பிடி தொழில்களைச் செய்கின்றனர். இங்குள்ள தமிழ் மீனவர்களிடம் அப்படிப்பட்ட தொழில்நுட்பங்கள் இல்லை.

இரு நாட்டு மீனவர்களைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் அடையும் வேலையில் இலங்கையில் உள்ள சிலர் செய்து வருகின்றனர். 2011 ஆம் ஆண்டு எம்.பி.,யாக இருந்த கனிமொழி மூலம் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. 2014 ஆம் ஆண்டு அரசாங்க ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அப்போது தமிழக மீனவர்கள் தரப்பில், ‘இது பரஸ்பர மீன்பிடி பகுதியாக இருக்க வேண்டும்; இரு தரப்பும் எத்தனை நாள்கள் மீன் பிடிக்கலாம் என்றெல்லாம் பல விஷயங்கள் பேசப்பட்டன. ஆனால், அவை செயல்பாட்டுக்கு வரவில்லை.

இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு ஏராளமான உதவிகளைச் செய்கிறது. மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்” என்றார்.

சேனாதிபதி சின்னத்தம்பி – தலைவர், தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு

“இலங்கைக்கு கச்சதீவை தாரைவார்த்து 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 ஆண்டுகளில் தமிழக மீனவர்களுக்கு எந்த பலனும் இல்லை. 1974 கச்சத்தீவு ஒப்பந்த 6 ஆவது ஷரத்தில் உள்ள பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு செயல்படுத்த மறுத்து வருகிறது. இந்திய அரசு இதை வேடிக்கை பார்க்கிறது.

தற்போது இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி சட்ட திருத்தம் 2018 என்ற மீன்பிடி சட்ட திருத்தத்தை கொண்டு உண்டு கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் தினம் ஒரு படகு வீதம் தொடர்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை கைது செய்து, இந்திய மீனவர்களை பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகிறது.
இந்திய மீனவர்களுக்கு ஆறு மாதம் முதல் இரண்டு வருடம் வரை நீண்டகால சிறை தண்டனை மற்றும் படகுகளை அரசுடமையாக்குதல் போன்ற கொடுமையான செயல்பாடுகளை இலங்கை அரசு செய்து வருகிறது. இதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. மத்திய அரசு இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை.

தமிழக மீனவர்கள் போராட்டமும், நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கைகளையும் மத்திய அரசு செவிசாய்ப்பதாய் இல்லை. இருநாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிப்பது வலியுறுத்தி இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை பல்வேறு முறை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் இதுவரை தீர்வு காணப்படவில்லை. தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள ஒரு சில ஆளும்கட்சிகள் இருநாட்டு மீனவர்களை தங்கள் அரசியல் லாபத்துக்காக போராட வைத்து இருநாட்டு மீனவர்களிடயே விரோதத்தை உருவாக்கி வருகிறார்கள்.

ஆனால், இந்திய – இலங்கை மீனவர்களுக்கு நட்புறவை உருவாக்கும் நோக்கத்தோடு இருநாட்டு மீனவர்கள் கூட்டமைப்பினர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்த இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. விரைவில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருநாட்டு மீனவர் உறவில் சமூகமான சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Integrative counselling with john graham. Rent a car/bike/boat roam partner.