தமிழக பட்ஜெட் இலட்சினை: ரூபாய் குறியீடு தமிழ் எழுத்துக்கு மாற்றம்… பின்னணி என்ன?

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரின் முதல் நாள் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
இதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கான புதிய இலட்சினையை வெளியிட்டுள்ளார். அதில், தேவநாகரி எழுத்தில் உள்ள ‘₹’ குறியீட்டுக்குப் பதிலாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்து இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், ‘ எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற வாசகத்துடன், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட” எனக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இலட்சினையை பதிவிட்டுள்ளார்.
பட்ஜெட் உரைகளிலும் தொடர்புடைய ஆவணங்களிலும் ‘ரூபாய்’ (தமிழில்) அல்லது ‘ரூ’ (Ru) என்பதை குறிப்பிடுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்ப்பதிப்பில் பணத்தொகை குறிப்பிடப்படும் இடங்களில் ‘ரூ’ என எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் ஆங்கிலப் பதிப்பில், ‘₹’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இலட்சினை மாற்ற பின்னணியும் சர்ச்சையும்
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் இலட்சினையில் தேவநாகரி எழுத்தான ‘₹’ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறித்து விவாதமும் சர்ச்சையையும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், ” 2025-26 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் மாநில பட்ஜெட்டில் ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீட்டை திமுக மாற்றி இருக்கிறது. தமிழர் உருவாக்கிய ரூபாய்-க்கான குறியீட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்று கொண்டிருந்தது. ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கியது திமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் உதயகுமார்தான் ” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ” இந்த நடவடிக்கை இந்தியாவிலிருந்து வேறுபட்டது திமுக என்ற நிலைப்பாட்டையே பிரதிபலிக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “இதில் சட்டவிரோதமானது எதுவும் இல்லை… இது ஒரு மோதலும் அல்ல. நாங்கள் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அதனால் தான் தமிழக அரசு இதை செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தமிழக அரசு தரப்பில், “15 அலுவல் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை முதலமைச்சர் உபயோகித்து உள்ளார். இது தாய் மொழி தமிழ் மீதான பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது. இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது இல்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.