அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விளக்கம்!

சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாக பதிலளித்ததோடு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் இலாபத்துக்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம் என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொள்வதாக கூறினார்.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில்,”சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்டிருக்கக்கூடிய பாலியல் வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம். அதை யாராலும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று, அவருக்கு சட்டப்படி நியாயம் பெற்றுத் தரக்கூடிய காரியத்தைத் தவிர, தமிழ்நாடு அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவாக, உறுதியாக, ஆணித்தரமாக முதலிலேயே நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

குற்றம் நடந்த பிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாகக் கைது செய்யாமல் விட்டிருந்தாலோ அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணிநேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்தபிறகும், குற்றம் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் திரட்டியபிறகும் அரசைக் குறை சொல்வது, அரசியல் ஆதாயத்திற்குத்தானே தவிர, உண்மையான அக்கறையோடு செய்யப்படுவது இல்லை என்று இந்த மாமன்றத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

பாதுகாப்பு இல்லை; கேமரா இல்லை என்று பொத்தாம்பொதுவாச் சொல்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை. சம்பவம் நடந்த வளாகத்தைச் சுற்றியிருக்கிற பகுதிகளிலிருந்த கண்காணிப்புக் கேமிராக்கள் உதவியோடுதான் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு, “யார் அந்த சார்?” என்று கேட்கிறார்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்பொழுது இந்தப் புகாரை விசாரிக்கிறார்கள். கைது செய்யப்பட்ட குற்றவாளி குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாரேனும் குற்றவாளிகள் இருக்கிறார்களா என்பது தெரிய வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்; அது யாராக இருந்தாலும் சரி; அவர்கள் மீது தயவு தாட்சண்யமே இல்லாமல் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை இந்த அவைக்கு 100 சதவீதம் உறுதியோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

அதுமட்டுமல்ல; இன்னும் முக்கியமானது, இந்த வழக்கில் விரைந்து விசாரணை மேற்கொண்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும். அதோடு, சிறப்பு நீதிமன்றம் மூலம் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்பதை இந்த அவைக்கு நான் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எதிர்க்கட்சிகளைக் கேட்க விரும்புவது – “யார் அந்த சார்?” என்று சொல்லி குற்றம்சாட்டுகிறீர்கள். உண்மையாவே உங்களிடம் அதற்கான ஆதாரம் இருந்தால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டிருக்கின்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சென்று அதைக் கொடுங்கள்; அதைச் சொல்லுங்கள். அதை யார் தடுக்கப் போகிறார்கள்? அதைவிட்டுவிட்டு, ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில் வீண் விளம்பரத்துக்காக, குறுகிய அரசியல் இலாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.

தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்” எனப் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dewan kawasan batam lantik kepala bp batam dan wakil kepala bp batam. Click here for more sports news. The nation digest.