புயல், மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை மனிதரால் தடுக்க முடியாது. ஆனால் அதன் வரவை முன்கூட்டியே அறிந்துகொண்டால், அநாவசிய உயிரிழப்புகள், சேதங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். அத்தகையதொரு சிறப்பான நடவடிக்கையைத் தான் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அது என்னான்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படியுங்க…
தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எதிர்பாராத வகையில் பெய்த பெரு மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பும் மக்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கின.
பொதுமக்கள் உஷாராக TN-Alert செயலி
இந்த நிலையில், இந்த ஆண்டு பருவமழையின் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிடக்கூடாது என்ற முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது. எனவே, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மழை மற்றும் வெள்ளத்தினை முன்கூட்டியே எளிதாக தெரிந்து கொண்டு, முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் தமிழக அரசு TN-Alert என்ற கைபேசி செயலியை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் எளிய முறையில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலின் மூலம், பொதுமக்கள் தங்களது இருப்பிட வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்து கொள்ளலாம்.
மேலும் தினசரி மழையளவு, நீர்தேக்கங்களின் நீர் இருப்பு விவரம், பேரிடர் காலங்களில் பாதிப்படையக்கூடிய பகுதிகளின் விவரம் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
அத்துடன் பேரிடர் காலங்களின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற அறிவுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் தங்களது பகுதியில் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களையும் இந்த செயலியின் மூலம் எளிதாக புகார் தெரிவிக்கலாம்.
இந்த செயலியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியான தினசரி பெறப்பட்ட மழை அளவு, தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா போன்ற தகவல்களை அறியலாம். TN-Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
தமிழக அரசின் இந்த ஆப் மூலம் சொத்துகள் சேதம் குறைவதுடன், எந்த ஒரு பேரிடரின் போதும் உயிரிழப்பை முற்றிலும் தவிர்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.