தமிழக சட்டசபையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அந்த துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது, உழவர் நலன் சார்ந்து அவர் வெளியிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் இங்கே…
உழவர்களுக்கு முழு மானியம்
உயிர்ம விளைபொருட்களின் எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை கட்டணத்திற்கு உழவர்களுக்கு முழு மானியம் வழங்கப்படும்.
உயிர்ம வேளாண் நிலையை அடைந்த உழவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். உயிர்ம வேளாண்மை சான்றிதழ் பெற, உழவர்கள் பதிவு செய்வதற்கான கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்து, இலவசமாகப் பதிவு செய்யப்படும்.
முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள்
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ரூ.42 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இம்மையங்களில் உழவர்களுக்கு தேவையான உரங்கள், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்வதோடு, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும் ஆலோசனை வழங்கப்படும்.

உழவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா
நெல் உற்பத்தித் திறனில் சாதனை படைத்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை நேரடியாக சென்று கண்டுணரும் வகையில், 100 முன்னோடி உழவர்களை அரசு சார்பில் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
1 லட்சம் உழவர்கள் பயன்பெறும் சிறப்புத் திட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2,338 ஊராட்சிகளில் வரும் நிதியாண்டில் ரூ.259.50 லட்சம் மானிய ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஒரு லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த நீர்த் தேவையுள்ள பயிர்களை ஊக்குவித்திட மாற்றுப்பயிர் சாகுபடித் திட்டம் ரூ.12 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
உழவர் சந்தை
தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டிற்கு எடுத்து சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைத்தல்.
வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம்.
உழவர்களுக்கு 1.80 லட்சம் பாசன மின் இணைப்புகள்
புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம்.
உழவர்களின் நீர்ப்பாசன ஆதாரத்திற்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு அரசு 2021 – 22ஆம் ஆண்டு முதல் புதிய பாசன மின் இணைப்புகளை வழங்கி வருகிறது. இதன்வழி, இதுவரை 1.80 லட்சம் பாசன மின் இணைப்புகள் உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், வறண்ட நிலங்களும் வளம் பெற்றுள்ளன என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.