Amazing Tamilnadu – Tamil News Updates

2026 தேர்தல்: வேகமெடுக்கும் திமுக வியூகங்கள்… களமிறக்கப்படும் அமைச்சர்கள்!

டந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி, உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் திமுக, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது.

திமுக-வின் தொடர் வெற்றிக்கும் அதன் கூட்டணி பலமும் முக்கிய காரணமாக கருதப்படும் நிலையில், அந்த கூட்டணியை உடைக்கும் முயற்சிகளும் எதிர்க்கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாட்டுக்கு முன்னர், அதிமுக-வுக்கு மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு

விடுதலை சிறுத்தைக் கட்சியை தங்கள் பக்கம் இழுத்துவிட்டால், அவர்களுடன் சேர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளையும் எளிதில் இழுத்துவிடலாம் என்ற நோக்கத்திலேயே அதிமுக அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், எரிகிற தீயில் எண்ணெய் வார்த்த கதையாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசியதும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் சுதாரித்துக் கொண்ட திமுக தலைமை, உடனடியாக திருமாவளவனை நேரில் அழைத்துப் பேசியது. அப்போது அவருக்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி சில உத்தரவாதங்களும் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்தே, திமுக கூட்டணியில் இருந்து தனது கட்சி ஒருபோதும் விலகாது என்றும், கூட்டணி உடைய விசிக ஒருபோதும் காரணமாக இருக்காது என்றும் திருமாவளவன் அறிவித்தார். இதனால், கூட்டணி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது.

2026 தேர்தலுக்கு இப்போதே வியூகம்

இருப்பினும், 2026 தேர்தலுக்கு முன்னதாக எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், கூட்டணி கட்சிகளின் பலம் அல்லாமலேயே அனைத்து தொகுதிகளிலும் வெல்லக்கூடிய அளவுக்கு கட்சியை தயார் செய்ய வேண்டும் என திமுக தலைமை கருதுகிறது. இதனையடுத்தே 2026 தேர்தலுக்கு இப்போதிருந்தே கட்சியைத் தயார்படுத்தும் நோக்கில் திமுக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு அம்சமாகவே, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். இக்குழுவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், இவர்கள் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல்/ நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட திமுகவில் தொகுதி பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொகுதி பார்வையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

களமிறக்கப்படும் அமைச்சர்கள்…

கட்சி ரீதியாக இத்தகைய முன்னேற்பாடுகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஆட்சி ரீதியாகவும் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதால், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மேலும் வேகம் காட்டி, அதனை பொதுமக்கள் உணர்ந்து கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளும் தேவை என கருதும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்காக அமைச்சர்களைக் களமிறக்குகிறார்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் அமைச்சர்கள் பலரை வருவாய் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனை நியமித்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version