Amazing Tamilnadu – Tamil News Updates

விலங்குகளுக்கும் விடுதி கட்டிய கலெக்டர்… திருவண்ணாமலை கல்வெட்டுகள் சொல்லும் சுவாரஸ்யம்!

மிழகத்தில் மன்னர் காலம் தொடங்கி ஆங்கிலேயர் காலம் வரையிலுமான கல்வெட்டுகள் ஒவ்வொன்றிலும் காணப்படும் தகவலின் பின்னணியில் ஏராளமான தகவல்கள் ஒளிந்திருக்கும். அந்த மண்ணை ஆண்டவர்களின் சரித்திரம் தொடங்கி, அவர்களது தர்ம குணம், வீரம், அறம் சார்ந்த பண்புகள், தியாகம் போன்றவற்றை விவரிக்கும் செய்திகள் அந்த கல்வெட்டுகளின் பின்னால் இருக்கும்.

திருவண்ணாமலையில் 3 கல்வெட்டுகள்

அந்த வகையில், திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள 3 கல்வெட்டுகளின் பின்னணியிலும் அதுபோன்ற தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. தச்சம்பட்டு, முருகன் கோயில் அருகே உள்ள குளத்தின் கரையில் 2 கல் வெட்டுகளில் ஒன்றில் குறு நில மன்னன் தன் மனைவியுடன் கூடிய பலகை கல் சிற்பமும், மற்றொரு கல்வெட்டில் கிருஷ்ணப்பநாயக்கர் குளம், தர்ம சத்திரம் கட்டியுள்ளதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, 350 ஆண்டு பழமையானவை.

குறுநில தலைவன் என கருதப்படுகிற ஆண், பெண் உள்ள சிற்பம் கீழே உள்ள கல்வெட்டில், ‘மணலூர்பேட்டையில் இருக்கும் கெங்கை கோத்திரம்’ என உள்ளது. மற்றொரு கல்வெட்டில், கிருஷ்ணப்ப நாயக்கர், மனைவி சூப்பச்சியம்மனுக்காக பச்சையம்மாள் மகனார் முனியகண்ணன் குளமும், தர்மசத்திரமும் கட்டியதாக குறிப்பிடுகிறது.

விலங்குகளுக்கும் விடுதி

மேலும் ஒரு கல்வெட்டு, மணலூர்பேட்டை சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துகள் பொறிக்கப்பட்ட அதில், ‘நாப்பு துரை விடுதி’ ( KNAPP REST HOUSE for Travellers & Animals in honour of Our popular Collector A.R.KNAPP Esqn ICS ) என பொறிக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்ததில், 1909 – 1910 ஆம் ஆண்டில், தென்னாற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த நாப்பு துரை என்பவர், தன் பணி காலத்தில் அமைத்த தங்குமிடம் எனக் கருதப்படுகிறது.

” நாப்பு துரை, இங்கிலாந்து நாட்டில் 1870-ல் பிறந்தவர். மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பணிகளை இந்தியாவில் செய்து வருவாய் துறையில் (Board of Revenue) செயலாளராக இருந்துள்ளார். மெட்ராஸ் எம்.எல்.சியாகவும் இருந்தவர், 1954-ல் காலமானார்.

கலெக்டரின் தர்ம குணம்

இவர் தனது பணி காலத்தில், மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துள்ளார். அதனால் தான் இவரைப் போற்றும் விதமாக கல் வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை – மணலூர் பேட்டை வழி தடத்தில் பயணிகளின் நலனுக்காக தங்கும் விடுதியை நாப்பு துரை கட்டியுள்ளார். பயணிகளுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் அந்த விடுதியில் தங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாப்பு துரையின் தர்ம செயல்பாட்டை எடுத்து காட்டுகிறது.

இவரது மற்றொரு தர்ம செயலின் தடயமும் திருவண்ணாமலையில் உள்ளது. நாப்பு துரை கல்வெட்டில் காணப்படும் ‘in honour of our popular collector’ என்ற வார்த்தை மக்கள், ஊர்க்காரர்கள் வைத்த பெயராக இருக்கலாம். அந்த அளவுக்கு அவர் மக்கள் நலனுக்காக செயல்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. அதன் வெளிப்பாடே இக்கல்வெட்டுகள் ” என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன்.

Exit mobile version