திமுக கூட்டணியில் அங்கம் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வருகிற அக்டோபர் மாதம் தனது கட்சி நடத்த உள்ள
மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் கலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டின் நோக்கம் மது ஒழிப்பு என்றுதான் என்றாலும், இதன் பின்னணியில் சில அரசியல் கணக்குகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
திருமாவளவனின் அவரது இந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்பது குறித்து அதிமுக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் கலந்துகொள்ளாவிட்டாலும், அவரது சார்பில் அக்கட்சியின் முக்கிய பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த மாநாடு வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றத்துக்கு வழி வகுக்குமா என்பது குறித்து காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, திருமாவளவன் வலியுறுத்துவது போன்று தமிழ்நாட்டில் மது ஒழிப்பு சாத்தியமா? இது குறித்து திமுக தரப்பில் கேட்டோம்.
“மது ஒழிப்பை மக்களே ஏற்கவில்லை!”
பொள்ளாச்சி உமாபதி (மாநிலச் செயலாளர், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை)
” மது குடிப்பதால் குடும்பங்கள் பாதிப்படைகின்றன. ஒழுக்கம் சார்ந்து பார்க்கும்போது மது தடை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மது அமலில் இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் மதுவை நீக்குவது என்பது சாத்தியமில்லை. இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தெரியும். மதுவை தடை செய்ய வேண்டும் என்பதில் கொள்கை அளவில் எங்களுக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால், அது நடைமுறையில் சாத்தியமா என்பது தான் கேள்வி.
தவிர, மது ஒழிப்பு என்பதை மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான மக்கள் தி.மு.க-வுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் மது ஒழிப்பு என தி.மு.க முன்னிறுத்திய கருத்தில் உடன்பாடு இல்லாததால் ஒரு சதவீத ஓட்டில் தோல்வியை தழுவினோம்.
மது ஒழிப்பு என்பது உலகம் முழுவதும் தோல்வி அடைந்துவிட்டது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாத சூழலில் இங்கு மட்டும் மதுவிலக்கு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் போன்ற மாநிலங்களில் கள்ளச்சாராயம் கரைபுரண்டு ஓடுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அங்கெல்லாம் பெயர் அளவுக்கு மதுவிலக்கு அமலில் உள்ளது. தமிழ்நாட்டிலும் மதுவை நீக்குவது நடைமுறையில் சாத்தியமா என்பது தான் கேள்வி” என்றார்.
“மது ஒழிப்பு பிரசாரத்தை தங்கள் கட்சிக்குள் அமல்படுத்தட்டும்!”
வழக்கறிஞர் பா.புகழேந்தி (மனித உரிமை ஆர்வலர்)
தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது அவசியம் தேவை. இன்று மதுவிலக்கு கோரிக்கையை அரசியல் கட்சிகள், அரசியலாக பார்க்கின்றன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மதுவை எதிர்ப்பதும் ஆளும்கட்சியாக வந்த பிறகு மதுவை ஆதரிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
நாட்டில் நடக்கும் 80 சதவீத மனித உரிமை மீறல்கள், குற்றங்களுக்கு அடிப்படையாக போதை இருக்கிறது. மனிதனை, தன்னிலை மறக்கச் செய்து குற்றங்களை செய்வதற்கு தூண்டுகோலாக போதை இருக்கிறது. இவை ஒழிக்கப்பட வேண்டும்.
‘கள்ளுண்ணாமை’ என திருவள்ளுவர் காலத்தில் இருந்தே மதுவுக்கு எதிராக பேசப்பட்டு வருகிறது. அறநெறி நூல்களில் பேசப்பட்டுள்ளது. மதுவுக்கு எதிராக மாநாடு நடத்துவதால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. மக்களிடம் சென்று பேச வேண்டும்.
அதற்கு முதல்கட்டமாக, மதுவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள், தங்களின் தொண்டர்கள் குடிக்கக் கூடாது என்பதை கொள்கையாக அறிவிக்க வேண்டும். அரசியல் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருந்தால் அவர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்படும். இதை கொள்கையாக அறிவித்தால், அந்தக் கட்சியில் எத்தனை பேர் மீதம் இருப்பார்கள் என்பது முக்கியம். யார் வேண்டுமானாலும் மது ஒழிப்பு மாநாடு நடத்தலாம். அதன் பயன் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.