திமுக கூட்டணியில் அங்கம் முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வருகிற அக்டோபர் மாதம் தனது கட்சி நடத்த உள்ள
மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் கலந்துகொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அத்துடன் அவரது இந்த அழைப்பு வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றத்துக்கு வழி வகுக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்து 2024 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக கூட்டணி சிந்தாமல் சிதறாமல் ஒற்றுமையாக நின்று வெற்றி பெற்று வருகிறது. ஆன போதிலும், சமீப காலமாக கூட்டணி கட்சிகளிடையே திமுக மீது அதிருப்தி நிலவுவதாக செய்திகள் வெளியாகின.
திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே ஏதோவொரு விஷயத்தில் அவ்வப்போது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியே வருகின்றன.
இந்த நிலையில் தான், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தி பிறந்தநாள் அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.
2016 தேர்தல் அறிக்கையில் திமுக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது. திமுக-வுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. அதிமுக அதிமுக-வுக்கும் உடன்பாடு உண்டு. இடது சாரி கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உடன்பாடு உண்டு. எல்லா கட்சிகளுக்கும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் ஏன்?” எனக் கேள்வி விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், “தயக்கம் ஏன் என யாரை குறித்து கேட்கிறீர்கள்” என்ற கேள்விக்கு மதுவிலக்கை வலியுறுத்தும் எல்லோருக்கும்தான். அதிமுகவும் சொல்கிறது. ஆனால் அமல்படுத்தவில்லை. அவர்களும் எங்களுடன் சேரட்டும். இந்த மாநாட்டிற்கு வர விரும்பினால் வரட்டும். அதிமுக கூட வரலாம். எந்த கட்சிகளும் வரலாம் என்றார். மது ஒழிப்பை வலியுறுத்தும் அனைவரும் ஒரே மேடையில் நிற்கும் தேவை உள்ளது” எனப் பதிலளித்தார்.
அதிமுக – திமுக ரியாக்ஷன் என்ன?
அதிமுக-வுக்கு அழைப்பு விடுத்து திருமாவளவன் இவ்வாறு பேட்டியளித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு திமுக மற்றும் அதிமுக-வின் ரியாக்ஷன் என்ன என்பது குறித்த கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, ” விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக-வை அழைத்து அவர்களின் தனிப்பட்ட விருப்பம்” எனச் சொல்லி முடித்துக்கொண்டார்.
அதே சமயம், இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “மதுக்கடை வருமானத்தை உயர்த்தி விட்டு, குடிக்கிறவர்களின் எண்ணிகையை தமிழ்நாட்டில் அதிகப்படுத்தி ஒரு வரலாறு படைத்ததுதான் திமுக. ஆட்சியின் சாதனை. அது தோழமையில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இப்போது பிடிக்கவில்லை. அதன் அடிப்படையில்தான் முதலில் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். இந்த மாநாடு நல்ல நோக்கத்துக்காக நடைபெறும் மாநாடு என்ற அடிப்படையில் அதிமுக-வுக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக. என்பது தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் மக்கள் இயக்கம். மக்களின் பேராதரவு பெற்றுள்ள இயக்கம் அதிமுக என்பதால் அந்த அடிப்படையில் இன்று அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்து கொள்வதா… இல்லையா என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்” என்றார்.
கூட்டணியில் மாற்றம் வருமா?
அதிமுக-வைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே விசிக-வுக்கு வெளிப்படையாகவே கூட்டணியில் சேர அழைப்பு விடுத்த அக்கட்சி, காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் பேச முயன்றதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விசிக-வை இழுக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை தவிர்க்காது. பாமக-வும் அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையில், விசிக-வுக்கு அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதில் பெரிய பிரச்னை எதுவும் இருக்காது. அதே சமயம், விசிக வருகை மட்டுமே கூட்டணிக்கு பலம் சேர்க்காது. காங்கிரஸ் கட்சியையும் இழுக்க அதிமுக முயற்சிக்கும். இந்த இரு கட்சிகளுமே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீட்டு பிரச்னையில் திமுக மீது அதிருப்தி கொண்டிருந்தன.
இந்த நிலையில், 2026 தேர்தலிலும் திமுக அதே நிலையைக் கடைப்பிடித்து, அதிமுக தாராளமாக தொகுதிகளை ஒதுக்க முன்வந்தால் இவ்விரு கட்சிகள் மட்டுமல்லாது, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி போன்றவையுமே அதிமுக கூட்டணிக்கு தாவ வாய்ப்பு உள்ளது என்பதே தமிழக அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
அதே சமயம், அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இத்தனை நாள் கட்டிக்காத்து வந்த கூட்டணியை அத்தனை சுலபத்தில் சிதறவிட்டு விடுவாரா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மேலும், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தாக்கம் வரும் நாட்களில் எத்தகையதாக இருக்கும் என்பதைப் பொறுத்தும் கூட்டணி கணக்குகள் மாற வாய்ப்புள்ளது.