இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள , ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
காந்தி (விஜய்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் (பிரபுதேவா) மற்றும் அஜய் (அஜ்மல் அமீர்) ஆகியோருடன் சேர்ந்து, நாசர் (ஜெயராம்) தலைமையில் சிறப்பு பயங்கரவாத தடுப்பு படையை (SATS)உருவாக்குகிறார். வேடிக்கையான, அதே சமயம் திறமையான டீமாக செயல்படுகிறார்கள். இருப்பினும், காந்தி தனது கர்ப்பிணி மனைவி (சினேகா) மற்றும் மகன் ஜீவன் ஆகியோருடன் தாய்லாந்திற்கு செல்லும்போது, ஒரு சோகமான இழப்பை எதிர்கொள்கிறார். அங்கு வேறு பிரச்னை வருகிறது. அது என்ன என்பதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர். திரைக்கதையில் நான் லீனியர் பாணியின் மூலம் அடுத்தது என்ன என்கிற ஆர்வத்தில் காட்சிகளை வைக்க முயன்றிருக்கிறார். வயதான விஜய், இளவயது விஜய் என டீஏஜிங் தொழில்நுட்பத்தை அசத்தலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக, இளவயது விஜய் கதாபாத்திரம்.
1990 களில் நாயகனாக விஜய் அறிமுகமான போது எப்படி இருந்தாரோ அப்படி ஒரு விஜய்யை மீண்டும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் எண்ணங்களுக்கு அப்படியே திரையில் உயிர் கொடுத்திருக்கிறார் விஜய்.
ஆச்சரியங்கள் மற்றும் திருப்பங்களுடன் வெங்கட் பிரபு படத்தைக் கொண்டு சென்றாலும், முன்கூட்டியே யூகிக்க முடிகிற காட்சிகள் அதன் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன.
உதாரணமாக, மெட்ரோ சண்டைக் காட்சியைச் சொல்லலாம். வயதான விஜய், ஒரு புதிய வில்லனுடன் சண்டையிடும் காட்சியில், வில்லன் முகமூடி அணிந்திருந்தாலும், முகமூடியை அவிழ்ப்பதற்கு முன்பே அது யார் என்பதை ரசிகர்களால் எளிதில் யூகிக்க முடிகிறது. ஆனாலும், படத்தில் சில ட்விஸ்ட்டுகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் மற்றவை அப்படி இல்லை.
கணவன், தந்தை எனப் பல பரிணாமங்களிலும் அழகான நடிப்பை வழங்கியிருக்கிறார் விஜய். தந்தை காந்திக்கும், மகனுக்கும் பெரிய வித்தியாசங்களை விஜய் கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், நடிப்பு, நடனம் அனைத்து ஏரியாவிலும் கில்லியாக தெறிக்க விடுகிறார். சண்டைக் காட்சிகளிலும் ஆக்ஷன் ஹீரோவாக கச்சிதமான நடிப்பு. குறிப்பாக, தாய்லாந்து கார் துரத்தல், மெட்ரோ ரயில் சண்டைக்காட்சிகள் உள்ளிட்டவை நன்றாக உள்ளன. தியேட்டரில் விசில் பறக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் படத்தில் பார்க்கும்போது ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, விசில் போடு மற்றும் மட்ட பாடல்கள். அதிரடியான பின்னணி இசை கதையோட்டத்துடன் ஒன்றி போகிறது.
1990 களில் கலக்கிய பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜய்யுடன் இந்தப் படத்தில் இணைந்திருப்பது ஒரு மல்டிஸ்டார் ஆச்சரியம். அவர்களுக்கான முக்கியத்துவத்தை சரியாகவே கொடுத்திருக்கிறார்கள்.பிரபுதேவாவின் கதாபாத்திரத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் நாம் எதிர்பார்க்காத ஒன்று. ஜெயராம், அஜ்மல் கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரம்.
மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி. சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் எதுவும் இல்லை. அப்பா விஜய் ஜோடியாக சினேகா. ஆரம்பக் காட்சிகளில் சுவாரஸ்யம். யோகிபாபு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
‘GOAT’ படத்தின் கதை மிக மெலிதான ஒன்று தான். கதையை விட ரெஃபரன்ஸ்களையே இயக்குநர் நம்பி இருப்பதாக தெரிகிறது. இது, மூன்று மணி நேரம் ஓடும் படத்தைப் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது. இருப்பினும், கடைசி 30 நிமிடங்கள் தெறி. உண்மையில் ட்விஸ்ட்டுக்குப் பின் ட்விஸ்ட் மற்றும் கேமியோவுக்குப் பிறகு கேமியோ எனப் படத்தின் ஸ்கிரிப்ட் செம வேகமாக செல்கிறது. இதுதான் ரசிகர்களை முகத்தில் புன்னகையுடன் தியேட்டரை விட்டு வெளியே நடக்க வைக்கிறது.