Amazing Tamilnadu – Tamil News Updates

ராணிப்பேட்டையில் விரைவில் தொடங்கும் JAGUAR LAND ROVER கார் உற்பத்தி ஆலை… 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

மிழ்நாட்டில் தொழில் முதலீட்டுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 9, 000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், கார் உற்பத்தி ஆலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. இந்த ஆலையில், உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JAGUAR LAND ROVER ) மின்சார காரை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்கவும், படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு

இந்த நிலையில், ராணிப்பேட்டையில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைய இருக்கும் இதற்கான கார் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும். இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலையில் வைத்து அசெம்பிள் செய்து வருகிறது.

இந்த நிலையில், விரைவில் தமிழ்நாட்டில் தயாராகும் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து, சீனா, பிரேசில், ஸ்லோவாக்கிய போன்ற நாடுகளைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version