Amazing Tamilnadu – Tamil News Updates

மலைக் கிராமங்களில் சாலை வசதிகள்… தமிழக அரசின் மாஸ்டர் பிளான் என்ன?

ழைக் காலம் வந்துவிட்டாலே மலைக்கிராம மக்கள் அவதிப்படுவது தொடர்கதையாகிவிடுகிறது. மருத்துவம் உள்பட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரே காரணம், போதிய சாலை வசதியின்மை.

அதை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த பெருமழையில் உணர முடிந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பல மலைக் கிராம மக்கள், மழைக்காலங்களில் அவதிப்படுகின்றனர். உதாரணமாக, வெள்ளகவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் காலனிக்கு உரிய சாலை வசதி அமைக்கப்படாததால், பெரியகுளம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்தக் காலனிக்கு செல்லும் வழியில் குப்பாம்பாறை மற்றும் கல்லாறு ஆறுகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இம்மக்களால் பத்து நாள்களாக நகர முடியவில்லை.

சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் என்பவரை, டோலி கட்டி 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்று சிகிச்சையளித்தும் அவர் இறந்துவிட்டார். அப்பகுதியில் சாலை வசதியில்லாமல் பெண்களும் முதியோர்களும் சிரமப்படுவதாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, கொடைக்கானல் வெள்ளகவி பகுதியில் விரைவில் சாலை அமைத்து தர அரசு முடிவு செய்துள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மலை கிராமங்களில் 10 குடும்பங்கள் வசிக்கும் பகுதியாக இருந்தாலும் அங்கு சாலை அமைத்து தரப்படும் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்துள்ளார். இது மலைக்கிராம மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

2,869 கி.மீ., சாலைகள், 28 பாலங்கள்…

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “அனைத்து பகுதிகளுக்கும் தரமான தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டங்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ,தன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. மத்திய அரசின் பிரதமர் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்படி, கடந்த 2014 வரை நூறு சதவீத நிதியை மாநிலங்கள் பெற்று வந்தன. ஆனால், தற்போது 60 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

அதை ஏற்று இணைப்பு சாலை வசதி இல்லாத ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களுக்கு, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படுத்தும் வகையிலான சாலைகள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 2023 வரை 4,449 கி.மீ., சாலைகள், 55 பாலங்கள், 2,883 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளன.

2023 – 24 ஆம் ஆண்டு 2,869 கி.மீ., சாலைகள், 28 பாலங்கள் அமைப்பதற்கு, 1,945 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. அதேநேரம், நாட்டிலேயே வளர்ந்து வரும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், மத்திய அரசு நிதியை குறைத்துள்ளது. இதனை மத்திய அரசின் கவனத்துக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

‘வளர்ச்சியை காரணம் காட்டி நிதியை குறைக்க கூடாது. பல கிராமங்களுக்கு சாலை வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளது. நடப்பாண்டுக்கான நிதியை, 4,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படும்போது சாலை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளும் தீர்க்கப்பட்டுவிடும்” எனத் தெரிவித்தனர்.

Exit mobile version