‘முதன்மை மாநிலம் ‘: தமிழக திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் மத்திய அரசின் ஆய்வறிக்கை!

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு, நீடித்த நிலையான வளர்ச்சிக் குறியீடுகள் குறித்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான நான்காவது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய திட்டங்களால் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுச் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது எனப் பாராட்டப்பட்டுள்ளது.
அதே அறிக்கையில், “காலநிலைமாற்றம், சுற்றுச் சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசிலா எரிசக்தி இரண்டிலும் சிறப்பாகச் செயலாற்றி தேசிய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உயர்ந்துள்ளது.
இவை மட்டுமல்லாமல், பசிப்பிணி அகற்றல், பொருளாதாரம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு, தரமான கல்வி, மக்கள் நலம் மற்றும் சுகாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி – புத்தாக்கத் தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தூய்மையான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல், சமத்துவமின்மையைக் குறைத்தல், உற்பத்தி மற்றும் நுகர்வு, அமைதியைக் காத்தல், நீதி நிர்வாகம், வலுவான நிறுவனங்கள், பாலின சமத்துவம் ஆகிய இனங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்து சிறந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த ஆய்வேட்டில், மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னேற்றம் கண்டு இந்தியாவில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்துள்ளது” என்றும் பாராட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அரசுப் பல்கலைக் கழகங்கள்
மேலும், “இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. அதிக அளவிலான மருத்துவக் கல்லுரிகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால் 31.1.2025 அன்று 2024-25 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் காலணிகள் உற்பத்தித் தொழில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள சிறப்பான முயற்சிகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரம்பரிய தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்துவரும் சூழலில், தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியிலும் தமிழ்நாடு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் உற்பத்தியில் 38% பங்களிப்பையும் இந்தியாவின் மொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில் 47% பங்களிப்பையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது. தோல் பொருள்கள் உற்பத்தித் துறையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது” எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.