Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தில் காலாவதி சுங்கச் சாவடிகள்… கட்டண வசூல் நிறுத்தப்படுமா?

சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அதன் வரம்பு மீறல்கள் குறித்து நாடு முழுவதுமே பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. என்றாலும், தமிழகத்தில் செயல்படும் சுங்கச் சாவடிகளின் வரம்பு மீறல்கள் வேறு எந்த மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதாக திமுக, பாமக உட்பட பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

சுங்கச் சாவடிகள் என்பவை தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியார் உதவியுடன் அமைப்பதும், உரியக் காலத்தில் செய்த செலவினை சுங்கக் கட்டணத்தை ஈடு கட்டிவிட்டு, மீண்டும் அரசிடம் அளிப்பதுமே ஆகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எதுவும் மேற்கண்ட விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எப்போது நிறுவப்பட்டன அவை செய்த செலவினத்தில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளன போன்ற தகவல்கள் எதுவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் மத்திய அரசும் சுங்கச்சாவடி நிர்வாகமும் சேர்ந்துகொண்டு கூட்டுக் கொள்ளையடித்து வருவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

சென்னை, பரனூர் சுங்கச்சாவடி காலாவதியான பின்னரும் கூட சட்டவிரோதமாகக் கூடுதலாக ரூ.28 கோடி வசூல் செய்திருப்பதாக மத்திய அரசின் தலைமை கணக்காயர் அறிக்கையை வெளியிட்டு ஓராண்டு ஆன பின்னரும் கூட அந்த சுங்கச்சாவடி அகற்றப்படவும் இல்லை.

இது தொடர்பாக தமிழக அமைச்சர் எ.வ.வேலு, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும், பரனூர் உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகள் உடனே அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

‘ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக விதிகள்’

இந்த நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் திமுக எம்.பி வில்சன், சுங்கச் சாவடிகளுக்கான கட்டண விதிகள், நெகிழ்வான விதிமுறைகளுடன் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக உள்ளதால், பொது மக்கள் நியாயமற்ற கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், எனவே நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் 2024 அக்டோபர் நிலவரப்படி, 64 சுங்க கட்டண சாவடிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருவதாக, நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய சிறப்பு கவன ஈர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார்.

அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலில், 1997 ஆம் ஆண்டின் முந்தைய தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் 60 கிமீ தூரம் குறித்து எந்த அளவுகோலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இது 1997 விதிகளைப் பற்றிய தவறான புரிதலைக் குறிக்கிறது.

சென்னையில் உள்ள பரனூர் சுங்கச் சாவடியில் சாலை பயனர்களுக்கு 2008 கட்டண விதிகளின் விதி 6ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பலன்களை மறுப்பது அநீதியானது” என மேலும் கூறி உள்ளார்.

கருணை காட்டுமா மத்திய அரசு?

கடந்த ஆண்டு சூரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சஞ்சய் ஈழவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு, “2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை 9 ஆண்டுகளில் வங்கிகளில் ரூ.25 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என ரிசர்வ் வங்கி பதிலளித்திருந்தது. இதில் பெரும்பாலானோர் பெரு நிறுவனங்கள் மற்றும் நாட்டைவிட்டு ஓடிப்போன பிசினஸ் புள்ளிகள்.

அவர்களுக்கு காட்டப்படும் கரிசனம், தங்களுக்கு மட்டும் ஏன் இல்லை என்பதே சாமான்ய மக்களின் கேள்வியாக உள்ளது. குறைந்தபட்சம், காலாவதியான சுங்கச் சாவடிகளிலாவது கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கட்டண வசூலை நிறுத்த கருணை காட்டுமா மத்திய அரசு?

Exit mobile version