தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!

மிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம், வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதுதவிர, 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ் டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நகர்ப்புற உள்ளாட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தாத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. 2026 ல் சட்டசபை தேர்தலும் வருவதால், முன்னதாகவே அதாவது இந்தாண்டே அனைத்து உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்த அரசு யோசித்து வருகிறது.

வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ள தொடங்கி உள்ளது. இதற்காக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

தற்போதுள்ள சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதற்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில், தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரிக்க வேண்டியுள்ளது. எனவே, கடந்த மார்ச் 28 ஆம் தேதி சட்டப்பேரவை தொகுதி வாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழக தலைமைதேர்தல் அதிகாரிக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலர் கே.பாலசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், “இந்த தரவுகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மாநில தேர்தல் ஆணையம், உரிய கள ஆய்வுகள் நடத்தி சரிபார்த்து தனது சொந்த தரவுகளை உருவாக்கும். தேர்தல் ஆணையம் அளிக்கும் தரவுகளை வேறு யாருக்கும் பகிரமாட்டோம். தொகுதி வாரியாக தற்போதுள்ள புதிய வாக்காளர் பட்டியல் தரவுகளை அளிக்க அறிவுறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியாகும்” என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy a memorable vacation with budget hotels in turkey. Anonymous case studies :.