பட்டா வாங்குவதற்காக இதுவரை இருந்துவந்த முறையில் தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் மாற்றம் கொண்டு வந்தது. இதன்படி, ஒரு நிலத்தையோ, வீட்டையோ அல்லது வேறு சொத்தையோ வாங்குபவர் அதன் பரப்பளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடனடியாக அவரது பெயர் ஆன்லைன் பட்டா மாறுதல் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும். மாவட்டம், தாலுகா, நகரம்/கிராமம், சர்வே நம்பர், உட்பிரிவு போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆன்லைன் பட்டாவை https://eservices.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சொத்தைப் பதிவு செய்தவுடன், புதிய உரிமையாளரின் பெயர் உடனடியாக பட்டா சான்றிதழில் தோன்றும் என்றும், அதனை https://tnreginet.gov.in/portal/ என்ற இணையப்பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இனி செல்போன் எண்ணும் கட்டாயம்
இந்நிலையில், ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கு செல்போன் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் உத்தரவில், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பட்டா, சிட்டா, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலம் விவரம், வரைபட விவரங்கள், பட்டா நகல், பட்டா விண்ணப்பம் நிலை, நகர நில அளவை, புலப்பட அறிக்கையை எளிதாக பெறலாம்.
இன்று முதல் அமல்
இந்த இணையதளத்தில் கிடைக்கும் சேவைகளை சிலர் தவறாக பயன்படுத்துவாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது இங்கிருந்து இலவசமாக பதிவிறக்கும் செய்யும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதேபோல ஆவணங்களில் மோசடிகளும் நடக்கின்றன. எனவே, தமிழக அரசு இந்த இணையதளத்தை வணிக நோக்கத்திற்கும் மோசடிகளுக்கும் தவறாக பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவருவதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, இந்த இணையதளத்திலிருந்து பட்டா, புலப்படங்கள் என அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாகும். செல்போன் எண்ணை பதிவு செய்தால், அந்த எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் வரும். அதனை பதிவு செய்தால்தான் ஆவணங்களை பதிவிறக்கம் செயய முடியும். ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகமாக 8 ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த நடைமுறையானது, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.