Amazing Tamilnadu – Tamil News Updates

அட்டனென்ஸ், பொதுத் தேர்வு: தமிழக கல்வித்துறை அதிரடி!

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் ஆய்வுகளை நடத்தவும், கற்றல்-கற்பித்தல் பணிகளை கண்காணிக்கவும் துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மாவட்டந்தோறும் பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் திருவள்ளூர் பம்மதுகுளம் அரசுப் பள்ளியில் மாணவர் வருகைப் பதிவேட்டில் முறைகேடு நடைபெற்றதாக அதன் தலைமையாசிரியர் மற்றும் அதை கண்காணிக்காத வட்டாரக் கல்வி அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், விழுப்புரம் கோலியனூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இருந்த குளறுபடியால் அதன் வட்டாரக் கல்வி அலுவலரும், செங்கல்பட்டு முள்ளிப்பாக்கம் அரசுப் பள்ளியில் முறையான தகவல் இன்றி நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்த ஆசிரியரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பள்ளிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தும்வகையில் பள்ளிக்கல்வித் துறைஅடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் என 30 பேர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள உத்தரவில், “பள்ளிக்கல்வித் துறையின்கீழ் பணியாற்றும் அதிகாரிகள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில் தமிழகபாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் பி.சங்கர் (புதுக்கோட்டை), ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி(செங்கல்பட்டு), பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் (மதுரை), தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ் (திருவள்ளூர்), தனியார் பள்ளிகள் இயக்குநர் மு.பழனிசாமி (சென்னை) உட்பட 30 அதிகாரிகள் தங்களுக்கான மாவட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை பள்ளிகளில் ஆய்வுசெய்து அதன் அறிக்கையை 5 ஆம் தேதிக்குள் தவறாமல் சமர்பிக்க வேண்டும். காலை மற்றும் மதிய உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் வருகை குறித்தும் கண்காணிக்க வேண்டும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்கள், பணியாளர்களின் காலிப்பணியிட விவரங்கள் குறித்து கேட்டறிய வேண்டும்.

இதுதவிர முதன்மை, மாவட்டக்கல்வி அலுவலகங்களிலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளின் அங்கீகாரம், கல்வி உபகரணங்களின் இருப்பு, தணிக்கை விவரங்களையும் ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Exit mobile version