தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை என்பது பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்குதல், ஓய்வூதியம் வழங்குதல், சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துதல், குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தி, பொது மக்களின் குறைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், பேரிடரின்போது பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்குதல், அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி கொடுத்தல், அரசு நிலங்களை பாதுகாத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நிலச் சீர்திருத்த சட்டங்களை செயல்படுத்துதல், அரசு நிலத்தை தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குதல், பட்டா மாறுதல் செய்கின்ற நிலத்தின் எல்லைகளை அளந்து காட்டுதல் இதுபோன்ற செயல்களை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற பணிகளையும், பொதுத்தேர்தல் நடத்துகின்ற பணிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
6 லட்சத்து 52,000 இலவச வீட்டுமனை பட்டாக்கள்
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு 6 லட்சத்து 52 ஆயிரத்து 559 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கியுள்ளார். அவர் உருவாக்கிய எங்கிருந்தும் எப்போதும் இணையம் வழி பட்டா மாறுதல் திட்டத்தினால், இரண்டு ஆண்டுகளில் 41 லட்சத்து 81 ஆயிரத்து 723 பட்டா மாறுதல்கள் இணையம் வழி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளன. கையினால் தயாரிக்கப்பட்ட பழமையான ஆவணங்களை ஒளி பிம்ப நகலெடுத்து பராமரிக்கும் பணி, சென்னையில் உள்ள ஆவணக் காப்பகம் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகத்தில் நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளில் 9,40,725 தாள்கள் ஒளி பிம்ப நகலெடுத்து பாதுகாக்கப்பட்டுள்ளன.
2 கோடியே 75 லட்சம் சான்றிதழ்கள்
2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இணையதளம் மூலமாக 26 வகையான சான்றிதழ்கள் வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டு, இந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 2 கோடியே 75 லட்சம் சான்றிதழ்கள் வழங்கி மக்கள் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டுள்ளன. முதியோர் ஓய்வூதியம் 1,000 ரூபாய் என்பதை 1,200 ரூபாயாக உயர்த்தியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்புப பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 16.12.2023 முதல் 18.12.2023 வரை பரவலாக கனமழை முதல் அதி கனமழை பொழிவு ஏற்பட்டது.
எளிமைப்படுத்தப்பட்ட பதிவுத்துறை பணிகள்
பதிவுத்துறையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் அவற்றில் 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலங்கள் ஒருவருக்கே இருந்தால், அவருக்கு உடனடியாக பட்டா மாற்றிக் கொடுக்கப்படுகின்றன. உரிய முறையில் இணையத்திலும் பதிவு செய்து கொடுக்கப்படுகின்றன. ஒருவர் இரண்டு ஏக்கருக்கு மேல் நிலம் வாங்கி விற்பனைக்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் மனைகள் போட்டிருந்தால் விற்பனை செய்யப்படும் மனைகளை பதிவு செய்யும்போது மனை வாரியாக பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. முன்பு ஒரு மனை வாங்கினால் துறை அதிகாரி அந்த இடத்திற்கு சென்று அளந்து கொடுக்க வேண்டும். தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று அனைத்து பணிகளையும் எந்தெந்த முறையில் எளிதாக்க இயலுமோ அந்தந்த முறைகளில் துறையை எளிமைப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யும் துறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவாய்த் துறையை மேம்படுத்தியுள்ளார் என்பது பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்றாகும்.
மக்கள் பாராட்டு
இப்படி, ஆட்சி ஏற்பட்ட மூன்று ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் முகவரித்துறை, கள ஆய்வில் முதலமைச்சர், மக்களுடன் முதல்வர், நீங்கள் நலமா முதலான பல புதுமையான திட்டங்களால் மக்கள் குறைகள் மனு வழங்கிய 15 நாள்களில் தீர்க்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைத்து பணிகளையும் எந்தெந்த முறையில் எளிதாக்க இயலுமோ அந்தந்த முறைகளில் துறையை எளிமைப்படுத்தி மக்களுக்கு நன்மை செய்யும் துறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவாய்த் துறையை மேம்படுத்தியுள்ளார் என்பது பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்றாகும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.