Amazing Tamilnadu – Tamil News Updates

கம்ப்யூட்டர் தொடர்பான படிப்புகளில் 22,000 பொறியியல் இடங்கள் சேர்ப்பு… முன்னணி கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்பு!

பொறியியல் படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு (AI)தரவு அறிவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் ( Robotics) போன்றவற்றை உள்ளடக்கிய கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளுக்கான எதிர்கால தேவை அதிகம் என்பதால், தற்போது இப்படிப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டு வருகிறது. அதே சமயம், மெக்கானிக்கல் உட்பட பிறவகை பொறியியல் படிப்புகளிலுமே கம்ப்யூட்டர் தொடர்பான துணைப் பாடங்களின் தேவை அவசியமாகிவிட்டதால், பொறியியல் படிப்புகளில் பாடத்திட்டங்கள் அதற்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

22,248 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு

அந்த வகையில், 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில், இளநிலை பொறியியலில் புதிதாக 8 பாடங்களும், முதுநிலை பொறியியலில் புதிதாக 10 பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ட்ரெண்டிங் படிப்புகளாக மாறி வரும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கணினி அறிவியல் சார்ந்த 15 பாடப்பிரிவுகளில் 22,248 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மொத்த இடங்களின் எண்ணிக்கை கடந்த 2.1 லட்சத்தில் இருந்து 2.3 லட்சமாக அதிகரித்துள்ளது.

வேலை வாய்ப்பு

ஆனால், மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் போன்ற முக்கியப் பிரிவுகளில் சேர்க்கை எண்ணிக்கை 3,000 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. “நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களுடன் செயல்படும் கல்லூரிகள் மட்டுமே சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக மாணவர்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும்” என் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மற்றொரு சாதகமான அறிகுறியாக, பொறியியல் கல்லூரிகள் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் படிப்புகளில் 1,147 கூடுதலான இடங்களைச் சேர்த்துள்ளன. “சிப் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.இந்தத் துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்தே, கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வரம்பை நீக்கிய AICTE

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), துறை சார்ந்த படிப்புகளில் அதிகபட்சமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற வரம்பை கடந்த 10 ஆண்டுகளாக நிர்ணயித்து இருந்தது. அதாவது, கல்லூரிகள் ஒரு பாடப்பிரிவில் அதிகபட்சம் 240 மாணவர்களை சேர்க்கலாம் என்ற வரம்பு இருந்தது. இந்த நிலையில், அந்த வரம்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனால், அதிகரிக்கும் தேவையைக் கருத்தில்கொண்டு கம்ப்யூட்டர் தொடர்பான பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை 15% வரை உயர்த்தியுள்ளதாக முன்னணி கல்லூரிகள் தெரிவித்துள்ளன.

Exit mobile version