Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழகத்தில் அமலாகும் 14 புதிய திட்டங்கள்… 46,931 வேலைவாய்ப்பு!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ரூ.38,698.80 கோடியில் செயல்படுத்தப்படும் இந்த 14 புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன துறைகள்?

இந்த முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் ஃபோன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள்,

மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி, மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி & மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டம்…

எந்தெந்த மாவட்டங்கள்… எவ்வளவு வேலைவாய்ப்பு?

இராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (ரூ.9000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 5000 நபர்கள்),

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (ரூ.13180 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 14000 நபர்கள்),

தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் PSG குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (ரூ.10375 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 3000 நபர்கள்),

அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1000 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 15000 நபர்கள்),

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ரூ.1395 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1033 நபர்கள்),

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.612.60 கோடி முதலீடு, வேலைவாய்ப்பு 1200 நபர்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முதலீட்டுத் திட்டங்களாகும்.

Exit mobile version