Amazing Tamilnadu – Tamil News Updates

மின் கட்டணம்: 820 யூனிட் மற்றும் ரூ. 5,000-க்கு மேல் இனி ரொக்கமாக செலுத்த முடியாது!

மின் கட்டணம் செலுத்துவதில், குறிப்பாக 820 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு சில புதிய விதிமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான ‘டாங்கட்கோ’ (TANGEDCO) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இந்த மின் கட்டணத்தை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்கள், மின்வாரிய இணையதளம் மற்றும் Gpay, Phonepe உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் செயலி மூலம் செலுத்தி வருகின்றனர்.

மின் கட்டணம் ரூ. 5,000 -க்கு மேல் என்றால்…

இந்த நிலையில், நுகர்வோரின் மின் கட்டணம் இனி ரூ.5,000-க்கு மேல் என்றால், டிஜிட்டல் பரிவர்த்தனை அல்லது காசோலை, வரைவோலை (டி.டி.) மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதேபோன்று 820 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் இதே விதிமுறை தான் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி ரூ.20,000-க்கு மேலான பரிவர்த்தனையை ரொக்கமாக பெறக் கூடாது. எனவே தமிழக மின்சார வாரியம் முதலில் ரூ.20,000-க்கு மேல் ரொக்கமாக பெறக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் இது ரூ.10,000 மாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 83 சதவீத டிஜிட்டல் பரிவர்த்தனையை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை அடைவதற்காக ரூ.10,000 என்ற ரொக்கம் இனி ரூ.5,000 மாக அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி மின்வாரிய அலுவலக கவுன்ட்டர்களில் இனி ரூ.5,000-க்கு மேலான மின் கட்டண தொகையை காசோலை, டி.டி. மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

சேவைக் கட்டணம் குறித்த புகார்

நுகர்வோர் மின் கட்டணம் மட்டும், கடந்த ஆண்டு (2023-24) மட்டும் மின்சார வாரியம், மின்பயன்பாடு கட்டணம், புதிய இணைப்பு கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்களை சேர்த்து மொத்தம் ரூ,60,505 கோடி வசூல் செய்துள்ளது. அதில் ஆன்லைன் மூலமாக மட்டும் ரூ.50, 217 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதாவது மொத்த வசூலில் இது 83 சதவீதமாகும். இது 2022-23 ஆம் ஆண்டு இருந்த 52 சதவீதத்தில் இருந்து 31 சதவீதம் அதிகரித்துள்ளது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மின் வாரிய அலுவலகத்திவ்ல, ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தும் போது சில வங்கிகள் சேவை கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள மின்சார வாரிய அதிகாரிகள், ஆன்லைனில் யுபிஐ, நெட் பேங்கிங் ஆகியவை மூலம் பணம் செலுத்துவதால் கூடுதல் கட்டணம் கிடையாது. அதே போல் மத்திய அரசின் பீம் (BHIM) செயலி மூலம் கட்டணம் செலுத்தினால் சில சமயங்களில் ஒரு சதவீதம் முதல் 3 சதவீத கட்டணம் வரை சலுகை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Exit mobile version