தமிழ்க் கடவுளான முருகன் புகழை போற்றும் விதமாக “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” இன்றும், நாளையும் தமிழக அரசின் இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ பழனியில் இன்று தொடங்கியது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முருகன் மாநாடு விழாவிற்காக மாநாடு நிகழ்வு நடைபெறும் வளாக நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாடு கொடியை ஏற்றி வைத்தார். மேலும் முருகன் கண்காட்சியை அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். துவக்க நிகழ்ச்சியாக , கலைமாமணி சுகி.சிவம், ‘முருகன் வளர்க்கும் முத்தமிழில் முந்து தமிழ்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும் முருக பக்தர்களும் உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து முன்னேற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள், பொதுமக்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. அனைவருக்கு அனுமதி இலவசம்.
இந்த 2 நாள் மாநாட்டில் முருகன் புகழ் பேசும் ஆன்மீக கண்காட்சி, ஆன்மீக சொற்பொழிவு, கருத்தரங்கம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள், ஆன்மீக மடாதிபதிகள் என பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அறுபடை முருகன் மூலவர் காட்சிகள், புகைப்படக் கண்காட்சி
இம்மாநாட்டில் வேல் அரங்கம், அருள் தரும் அறுபடை முருகன் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் என ஒவ்வொன்றும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்வெளிநாடுகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் என 5 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு மாநாட்டு திடல் மற்றும் அரங்கங்கள் தயார் நிலையில் உள்ளன. இம்மாநாட்டில் முருகனின் ஓவியக் காட்சியகம் 3டி அரங்கில் பா.விஜய் இயக்கிய முருகன் குறும்படம் காட்டப்படுகிறது. ஆன்மீக நூல்களின் புத்தக கண்காட்சி, அறுபடை வீடுகளின் மெய் நிகர் காட்சி அரங்கம் என பல அரங்கங்கள் காட்சிக்கு உள்ளன. இசை நிகழ்ச்சிகள்,கந்தர் அநுபூதி பாடல்கள் என பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
இம்மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர். ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
‘அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்’
இதனிடையே முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. கடந்த 3 ஆண்டில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகுதிகளில் ரோப் கார் சேவை அமைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளுக்கு இதுவரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 1,355 திருக்கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 8,436 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82,000 பேர் உணவருந்துகின்றனர். 4181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோவில் கருவறையில் சமத்துவம் காட்டப்பட வேண்டும். அன்பால் உலகம் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்” என்றார்.