Amazing Tamilnadu – Tamil News Updates

தமிழத்தில் அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்… விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க பணிகள் தொடக்கம்!

மிழகத்தில் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளால் நிர்வகிக்கப்படும் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம், பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட நிலையில், அதன்படி பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ செயல்படுத்தப்பட்டதால், குடும்ப அட்டை கேட்டு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்தன. மேலும், நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும் புதிய அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலும் முடிவடைந்து விட்டது.

எனவே, புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், தமிழ்நாடு மின்னாளுமை முகமை மூலம் பரிசீலிக்கப்பட்டு, கள ஆய்வுப்பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், 2.80 லட்சம் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் குடும்ப அட்டைகள் எண்ணிக்கை 2.10 கோடியாக இருந்தது. இது 2022 ல் 2.20 கோடியாக அதிகரித்தது. இந்தாண்டு நிலவரப்படி, 2 கோடியே 24 லட்சத்து 19, 359 குடும்ப அட்டைகள் உள்ளன.

நில அளவை பணிகளுக்கு வருகிறது கண்காணிப்பு மையம்

இதனிடையே, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில், பிழைகள் ஏராளம் வருகின்றன. இதுபோன்ற பிழைகளை சரி செய்ய விண்ணப்பித்தால், அதன் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனையடுத்து மனை வீடு, வாங்குவோர், பட்டா பெற விண்ணப்பிப்பதை எளிமைப்படுத்தவும், பொது மக்களுக்கு அலைக்கழிப்பை குறைக்கும் வகையிலும், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், பட்டா மாறுதல், நில அளவை பணிகளின் சேவைகளில் தரத்தை உறுதி செய்ய, புதிய கண் காணிப்பு மையத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version