தொடரும் காற்றழுத்த தாழ்வு:வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவது எப்போது?

ழக்கமாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வந்துவிடும். ஆனாலும், கடந்த சில தினங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு தான் உள்ளது.

பருவநிலை மாறுபாடு இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஜனவரியிலும் மழை வெளுத்து வாங்கியதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில், இந்த ஆண்டு அநேகமாக ஜனவரி 2 வரை பருவமழை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (26-12-2024) காலை 05.30 மணி அளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 28-12-2024 முதல் 30-12-2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31-12-2024 மற்றும் 01-01-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால், அந்த பகுதிக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கில் இருந்து குளிர் காற்று முழுமையாக வீச இருப்பதால், ஜனவரி 3 தேதி முதல் 8 தேதி வரை பனியின் தாக்கத்தால் குளிர் கடுமையாக இருக்கும். கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் உறைபனி இருக்கும். வறண்ட வானிலை, வறண்ட வடக்கு காற்று ஊடுருவல் நிகழும்போது, வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This contact form is created using. Rent a sailing boat and become your captain. hest blå tunge.