அமைச்சர் என்ற நிலையில் இருந்து துணை முதலமைச்சர் ஆன பின்னர் உதயநிதி எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னையாக வடகிழக்குப் பருவமழை உள்ளது. அதி தீவிர கனமழையாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக களத்தில் உதயநிதி நடத்தி வரும் ஆய்வுகள், வரவேற்பைப் பெற்றுள்ளன.
சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் உள்ளது. ஒவ்வொரு பேரிடரின்போதும் இங்குள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுவது வழக்கம்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
கட்டுப்பாட்டு துறையில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் மழை பாதித்துள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து அறிவுறுத்தல்களை வழங்கினார். மழை தொடர்பாக கட்டுப்பாட்டு அறையில் உள்ள எல்.இ.டி திரை காட்சிகளைக் கவனித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். நள்ளிரவு வரையில் இந்த ஆய்வு நீடிப்பதால் அதிகாரிகளும் உற்சாகத்துடன் வேலை பார்த்து வருகின்றனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் 50 முதல் 1,000 நபர்கள் தங்கும் வகையிலான நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த நிவாரண மையங்களில் தண்ணீர், பால், பிஸ்கெட், ரொட்டி, உணவு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்காக 35 பொது சமையல் அறைகள் தயார் நிலையில் உள்ளதாக கூறிய உதயநிதி, சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்க பாதைகளில் எந்தவித இடையூறுமின்றி போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. கணேசபுரம், பெரம்பூர் ஆகிய இரண்டு சுரங்க பாதைகள் மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அந்த சுரங்கப்பாதைகளிலும் மோட்டார் பம்ப் மூலமாக தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றது” என்றார்.
மீட்பு பணிக் குழுக்கள் குறித்துப் பேசிய உதயநிதி, “தற்போது வரை 24 குழுக்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட சென்னையில் 89 படகுகளும், பிறமாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
சென்னையில் 300 நிவாரண மையங்களும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன” என அவர் தெரிவித்தார்.
சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதியின் களப் பணியால் மழையை எதிர்கொள்வதில் அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். உதயநிதியின் நேரடி மேற்பார்வையில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடப்பதால் ஊழியர்கள் மத்தியில் புதிய உற்சாகம் தென்படுவதாக கூறுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.