தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கணக்கீடு அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் மாநிலத்தில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் தலைநகர் சென்னையிலும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக வழக்கத்தை விட அதிகமான மழை பெய்துள்ளது.
தமிழகத்திற்கு ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மற்றும் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவமழை காலம் உண்டு. இதில், வடகிழக்கு பருவமழை தான் தமிழக விவசாயிகளுக்கான நீர் தேவைகளையும், பொதுமக்களுக்கான குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய பெருமளவில் உதவும்.
அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் இரு பருவமழையையும் சேர்த்து ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ. மழை பெய்துள்ளது. இது, 2023 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகம் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டை விட 2024 ல் அதிகம்
இதில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 5 செ.மீ., மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், 14 செ.மீ., ஜூன் முதல் செப்டம்பர் மாதம் இறுதிவரை தென்மேற்கு பருவமழை காலத்தில், 39 செ.மீ., அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 59 செ.மீ. என மொத்தம் 117 செ.மீ. மழை பெய்துள்ளது. இது, 2023 ஆம் ஆண்டில் பெய்ததைவிட 14 செ.மீ. அதிகம் ஆகும்.
தென்மேற்கு பருவமழை
இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில், 16 மாவட்டங்களில், இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும் மழை பெய்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவாக மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருமழை
வடகிழக்கு பருமழை காலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அக்டோபரில் 21 செ.மீ., நவம்பரில் 14 செ.மீ., டிசம்பரில் 23 செ.மீ. என மொத்தம் 59 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 சதவீதம் அதிகம் ஆகும். அதே சமயம் 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் 28 சதவீதம் அதிகம் ஆகும். வடகிழக்கு பருவமழை காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில், இயல்பைவிட மிக அதிகமாக 59 சதவீதத்துக்கு மேல் மழை பதிவாகி உள்ளது. இதேபோல, 23 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது.
சென்னையில் ஐந்தாவது ஆண்டாக அதிகம்
அதேபோன்று தலைநகர் சென்னையிலும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 2024 ல் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான மழை, அதாவது 108 செ.மீ. மழை பெய்துள்ளது. கடந்த 10 ஆண்டுக் காலத்தில் இதுவே மிக அதிகமான மழைப் பொழிவாகும்.
அதிக மழைக்கு காரணம்…
கடந்த ஆண்டு, அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளில், ரெமல், அஸ்னா, டானா மற்றும் பெஞ்சல் புயல்கள் உருவாகின. 2023 ஆம் ஆண்டில் ஆறு புயல்கள் உருவான நிலையில், 2024 ஆம் ஆண்டில் புயல்கள் எண்ணிக்கை குறைந்தாலும் மழை அதிகரித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளிமண்டல சுழற்சி ஆகியவற்றின் காரணமாக 2024 ஆண்டில் மழை அளவு அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட கிழக்கு அலை மற்றும் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட எம்.ஜே.ஓ., அமைப்புகளின் தாக்கத்தால் மழைப்பொழிவு அதிகரித்தது என பாலச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.