பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் அறிமுகம் செய்தார். இதன்படி, சொத்தின் முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்காவிட்டால் அதை பதிவு அலுவலர் பதிவு செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் இங்கே…
“அசையா சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களைப் பதிவு செய்வதில் மோசடி, பொய் ஆவணம் புனைதல் மற்றும் ஆள்மாறாட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய பதிவுச் சட்டத்தின் 69-ம் பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு பதிவு விதிகளில் 55-ஏ என்ற விதி 1949-ம் ஆண்டு புகுத்தப்பட்டது. அந்த விதி, அசல் உரிமை மூல ஆவணம் அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிற பதிவேடுகளை, அசையாச் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்யும் நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
ஆவணத்தை பதிவு செய்பவர் தொடர்புடைய அசையா சொத்தின் மீது ஒரு உரிமை – மூலத்தைக் கொண்டுள்ளாரா? என்பதை உறுதிப்படுத்துவதே அந்த விதியின் நோக்கமாகும். இது மோசடியான பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடாகும்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பில் 69 ஆம் பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 1908 ஆம் ஆண்டுச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு முரணாக முடியாது என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த சூழ்நிலைகளில், 55-ஏ என்ற விதியின் நோக்கத்தை செயல்படுத்தவும். ஆவணங்களைப் பதிவு செய்வதில் மோசடி, பொய்யாவணம் தயாரித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பொது மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக, மத்திய சட்டத்தில் மாநில சட்டத் திருத்தத்தின் மூலம் சில தேவையான பிரிவை உட்புகுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது.
அசையா சொத்து தொடர்பான ஒரு ஆவணம் எந்தபதிவு அலுவலரிடம் பதிவிற்காக சமர்ப்பிக்கப்படுகிறதோ, அது சமர்ப்பிக்கப்படும் தேதிக்கு முன்பு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட சொத்தின் வில்லங்கச் சான்றிதழுடன் இணைத்து, சொத்தின் முந்தைய அசல் ஆவணத்தை சமர்ப்பிக்காவிட்டால் அதை பதிவு அலுவலர் பதிவு செய்யக்கூடாது. சொத்தின் மீது அடமானம் தொடர்பான வில்லங்கம் இருக்கும் போது. அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறாவிட்டால், அந்த ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது.
அசல் ஆவணம் அவசியம்
சொத்தின்மீது விற்பனை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அது நிறைவேற்றப்படவில்லை என்றால், அந்த ஒப்பந்தத்தின் நிவாரணத்திற் கான உரிமை வழக்கை தாக்கல் செய்வதற்கான கால வரையறை முடியாத சூழ்நிலையில் அந்த ஆவணத்தை பதிவு செய்யக்கூடாது. மூதாதையர் சொத்தாக இருந்து, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நேர்வில், அந்தச் சொத்து தொடர்பாக வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்படாவிட்டால், அதை பதிவு செய்யக்கூடாது.
முந்தைய அசல் ஆவணம் தொலைந்துபோய்விட்டால் அதற்கான அறிவிப்பை உள்ளூர் நாளிதழில் வெளியிட்டு, அந்த விளம்பரத்துடன் சேர்த்து காவல் துறையால் வழங்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டாலும் அதை பதிவு செய்யக்கூடாது” என அம்மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.