நாட்டிலேயே பயனாளர்களுக்கு சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக தெரியவந்துள்ளது.
மாநிலங்கள் வாரியாக பயனாளர்களுக்கு சராசரி மின்சாரம் சீராக வழங்கப்பட்டு வருவது குறித்து, மாநிலங்களவை உறுப்பினர் சாமிக் பட்டாச்சார்யா கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஶ்ரீபத் நாயக், ‘தீன் தயாள் உபத்யாயா’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 18,374 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ‘சௌபாக்கியா திட்ட’த்தின் கீழ் 2.86 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய புள்ளி விவரங்களின்படி, 2023 – 2024 ஆம் நிதியாண்டில் தேசிய அளவில், நகர்ப்புற பகுதிகளில் தினசரி 23.4 மணி நேரமும், கிராமப்புறங்களுக்கு 21.9 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேர சராசரி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கிராமப் புறங்களில் சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும், தமிழ்நாட்டில் கிராமப் புறங்களுக்கு சராசரியாக 23.5 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சராசரி மின்சாரத்தை வழங்கும் மாநிலங்களில் 23.8 மணி நேர சராசரி மின்சாரத்துடன் மகாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக குஜராத்தும் (23.7), ஆந்திராவும் (23.6) தமிழ்நாடும் (23.5) உள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புறங்களுக்கு சராசரியாக 18.1 மணி நேரம் மின்சாரமும், நகர்ப்புறங்களில் 23.4 மணி நேரம் மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது.
கைகொடுக்கும் காற்றாலை/சூரிய சக்தி மின்சாரம்
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்களுக்கான மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் மரபு சார்ந்த மின் உற்பத்தி ஒருபுறம் கைகொடுக்கிறது என்றால், இன்னொருபுறம் காற்றாலை மின்சாரமும் சூரிய ஒளி மின்சாரமும் பெரிய அளவில் கைகொடுக்கின்றன.
சூரிய மின்சக்தித் துறையில், கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு புதிய சாதனை படைத்தது. கடந்த ஜூலை 24 அன்று 5,512 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு, கடந்த மார்ச் 5 அன்று எட்டப்பட்ட 5,398 மெகாவாட் அளவைத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது.
அன்றைய தினம், 39.2 மில்லியன் யூனிட்கள் மின் கட்டமைப்பில் உறிஞ்சப்பட்டதாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO ) தெரிவித்துள்ளது. காற்றாலை மற்றும் சூரிய சக்தி இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை புதிய உச்சங்களை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.