தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், ஆளுநர் மாளிகைக்கு புதிய ஆளுநர் வர உள்ளாரா அல்லது ரவிக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி மாற்றம் இருந்தால், ரவிக்குப் பதிலாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் அலையடிக்கிறது.
10 புதிய ஆளுநர்கள் நியமனம்
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், யூனியன் பிரதேசமான புதுச்சேரி மற்றும் 9 மாநிலங்களுக்கு என 10 புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உத்தரவிட்டார்.
ஜார்க்கண்ட் , தெலங்கானாவில் ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாகவும் வகித்த சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன், ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசான்ராவ் பாக்டே, தெலங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா, சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துர், ஜார்க்கண்ட் ஆளுநராக சந்தோஷ்குமார் கங்வார், சத்தீஸ்கர் ஆளுநராக ராமன் டேக்கா, மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக சி.ஹெச்.விஜயசங்கர், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாக குலாப் சந்த் கட்டாரியா, அஸ்ஸாம் ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் ஆளுநராகவும் ) லட்சுமண் பிரசாத் ஆச்சாரியா ஆகியோர் நியமிக்கப்படுவதாக அவரது அறிவிப்பில் இடம்பெற்றிருந்தது.
முடிவடையும் தமிழக ஆளுநர் பதவிக்காலம்
அதே சமயம், இம்மாதம் 31 ஆம் தேதியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இவ்விரு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இந்த இரு ஆளுநர்களுமே மசோதாக்களை முடக்குவது மற்றும் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் முரண்டு பிடிப்பது எனப் பல்வேறு விஷயங்களில் மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இவர்களது மாற்றத்தை தமிழகத்தில் ஆளும் திமுக-வும், கேரளாவில் ஆளும் இடது முன்னணியும் எதிர்பார்த்து இருக்கின்றன.
இந்த நிலையில் தான், மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற உடனேயே, ரவி டெல்லி சென்று மோடியைச் சந்தித்தார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார். அவர் டெல்லியில் தொடர்ந்து தங்கி இருந்து மேற்கொண்ட இந்த சந்திப்பு, தமிழக ஆளுநர் பதவியில் அவர் தொடரக்கூடும் என்றும், இதற்காகவே அவர் மோடி உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார் என்றும் கூறப்பட்டது.
மீண்டும் நியமிக்க எதிர்ப்பு
இதனையடுத்து, மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில், தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அவரை மீண்டும் இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை என்றும், எனவே ரவியை இரண்டாவது முறையாக மீண்டும் நியமித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான்
இது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில் தான், தற்போது தமிழக ஆளுநர் பதவியிலிருந்து ஆர். என். ரவி நீக்கப்படுவார் என்றும், அவருக்குப் பதிலாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நியமிக்கப்படுவார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ரவி மற்றும் கான் ஆகிய இருவரின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது
அதே சமயம், குடியரசுத் தலைவர் விரும்பும் வரையிலோ அல்லது ஐந்தாண்டுகளுக்கோ அல்லது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் புதிய ஆளுநர் நியமிக்கப்படும் வரையிலோ ஆளுநர் தனது பதவியில் தொடரலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக தொடர்ந்து பதவியில் இருப்பாரா அல்லது மாற்றப்படுவாரா என்பது இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.