கல்வி நிதி மறுப்பு: ஜல்லிக்கட்டு பாணி போராட்டத்தை முன்னெடுக்க திமுக திட்டம்?

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு ஆளும் திமுக உட்பட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் ஆங்காங்கே மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் சங்கமும் போராட்டத்தில் குதித்துள்ளன.
இன்னொருபுறம், மத்திய அரசின் மும்மொழிகொள்கையை தீவிரமாக எதிர்க்கவும், தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்படாததை கண்டித்தும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தரப்பிலும் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபையில் தீர்மானம்
அதன் ஒரு பகுதியாக அடுத்தமாதம் கூட உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பாக சட்டசபையில் அரசின் தீர்மானம் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் அமலில் இருக்கும் என்பதை சட்டரீதியாக உறுதி செய்யும் வகையில் தீர்மான வாசகம் இடம்பெற்றிருக்கும் என்றும், அநேகமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே இந்த தீர்மானத்தைக் கொண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 1960 ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என்று கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டு சட்டசபையில் அறிவிக்கப்பட் டது. அதன்பின் 1968,1986 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் சடடசபையில் தமிழகத்தில் இரு மொழி கொள்கையை வலியுறுத்தி, தமிழக அரசு தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் மீண்டும் மும்மொழி கொள்கையை ஏற்க வலியுறுத்தப்படுவதால், இந்த பிரச்னையை தமிழக அரசும் ஆளும் திமுகவும் மிகத் தீவிரமாக அணுக முடிவு செய்துள்ளது.
வழக்குத் தொடரவும் திட்டம்?
மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் ஒரு மாநிலத்திற்கு நிதி வழங்க முடியாது என்று கூற இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. மத்திய அரசின் 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையையும், அதில் உள்ள மும்மொழி கொள்கையையும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எந்த மாநிலத்திற்கும் இல்லை. ஏனென்றால் கல்வி மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டிற்கும் பொதுவான பட்டியலில் உள்ளது.
எனவே இதனை அடிப்படையாக வைத்து இந்த விவகாரத்தில் சட்டசபை தீர்மானம் மூலமான அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ள தமிழக அரசு, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் நடவடிக்கைகள் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் இருக்கும் எனத் தமிழக அரசு தரப்பிலும் திமுக-வினர் தரப்பிலும் நம்பிக்கை நிலவுகிறது.

ஜல்லிக்கட்டு பாணி போராட்டம்
இது ஒருபுறமிருக்க, ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டபோது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் எப்படி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினார்களோ, அதேபோன்று இந்த விவகாரத்திலும் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி போராட வைக்க திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பாஜக-வை தவிர்த்து ஏறக்குறைய அனைத்து கட்சிகளுமே மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே உள்ளன. எனவே பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், சிறிய கட்சிகள், திராவிடர் கழகம் போன்ற அமைப்பு ரீதியான இயக்கங்கள், மாணவர் சங்கங்கள் போன்றவற்றை அணி திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தலாம் என திமுக தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், கூட்டணி கட்சிகளிடமும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநேகமாக இன்னும் சில தினங்களில் இது குறித்த அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.